திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகா தீப கொப்பரை.
திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகா தீப கொப்பரை.

2,668 உயரம் உள்ள அண்ணாமலை உச்சிக்கு கொட்டும் மழையில் மகா தீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது: இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது

Published on

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் இன்று (19-ம் தேதி) மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றுவதற்காக அண்ணாமலை உச்சிக்கு கொட்டும் மழையில் மகா தீப கொப்பரை நேற்று கொண்டு செல்லப்பட்டது.

காவல் தெய்வமான துர்க்கை யம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதி தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கடந்த 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

இதையடுத்து, 10 நாட்கள் நடைபெறும் பஞ்சமூர்த்திகள் உற்சவம் ஆரம்பமானது. கரோனாகட்டுப்பாடுகளால், மாட வீதியில் நடைபெற வேண்டிய உற்சவங்கள், கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நடைபெறுகிறது. இதில், தேரோட்டம் கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகைத் தீபத் திருவிழா இன்று (19-ம் தேதி) நடைபெறுகிறது. அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. இதைஒட்டி, அண்ணாமலை உச்சிக்கு, கொட்டும் மழையில் மகா தீப கொப்பரை நேற்று கொண்டு செல்லப்பட்டது.

ஜோதி வடிவில் காட்சி

முன்னதாக, அண்ணாமலையார் கோயிலில் மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையாரே காட்சி கொடுப்பதால், மூலவர் சன்னதியின் நடை அடைக்கப்படும். பின்னர், மறுநாள் காலை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

தீபத் திருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற 9-ம் நாள் உற்சவத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் ஆகியோர் காலையில் பவனி வந்தனர். பின்னர், பஞ்சமூர்த்திகளின் உற்சவம் இரவு நடைபெற்றது.

இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் நாளை (20-ம் தேதி) முதல் வரும் 22-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தெப்பல் உற்சவம் நடைபெறும். சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 17 நாள் தீபத் திருவிழா வரும் 23-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.

இதற்கிடையில், கரோனாகட்டுப்பாடுகளால், அண்ணாமலையார் கோயில் உள்ளே 2-வது நாளாக நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் வெறிச்சோடியது. அண்ணாமலையார் கோயில் உட்பட நகரம் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

நகரின் சுற்று வட்டப் பாதைகளில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, நகருக்குள் பேருந்துகள் வருவதை காவல்துறையினர் தடுத்துள்ளனர். இதனால் பிரதான சாலைகள் வெறிச்சோடின.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in