

திருவண்ணாமலையில் 2,668 அடி அண்ணாமலை உச்சியில் நாளை மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், நகருக்குள் வெளியூர் பக்தர்கள் அதிகம் வருவதை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 7-ம் தேதி துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கியது. 10-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (நவ.19) அதிகாலை 4 மணியளவில் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் கோயில் தீப தரிசன மண்டபத்தின் முன்பாக ஆணும், பெண்ணும் சமம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அர்த்த நாரீஸ்வரர் காட்சியளிக்கும் நிகழ்வும், அதே நேரத்தில் 2,668 அடி அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்
மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தை காணவும் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார். தற்போது, கரோனா தொற்று பரவல் அச்சத்தால் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், மகா தீப தரிசனம், பவுர்ணமி கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்ட பக்தர்கள் வருவதை தடுக்க நகரைச் சுற்றியுள்ள 9 முக்கிய சாலைகளில் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களையும் திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து நகருக்குள் வந்து, செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையிலும் பிற மாநில, மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களை விசாரித்த பிறகே அனுமதித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை நகருக்கான புதிய கட்டுப்பாடுகள் நேற்று (நவ.17) பிற்பகல் 1 மணி முதல் வரும் 20-ம் தேதி வரை அமலுக்கு வந்துள்ளது. திருவண்ணாமலைக்கு இன்று (நவ.18) முதல் 20-ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையில் 50% குறைக்கப்பட்டுள்ளது. தீப விழா நிகழ்வுகள் சமூக ஊடகங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு கூறும்போது, ‘‘அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தினசரி 10 ஆயிரம் வெளியூர் பக்தர்கள், 3 ஆயிரம் உள்ளூர் பக்தர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டது. பாஸ் வழங்கும் நடைமுறை இன்று (நவ.18) முதல் 20-ம் தேதிவரை நிறுத்தப்பட்டு கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 5 ஆயிரம் போலீஸார் பணியில் ஈடுபடுவர்’’ என்றார்.