

தமிழக அரசு அறிவித்துள்ள 2022-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பை இணைக்க வேண்டும் எனக் கடலூர் விவசாயிகள் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 2022-ம் ஆண்டு வரவுள்ள பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கென 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது.
அதில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய அனைத்தும் துணிப்பையுடன் சேர்த்து 20 பொருட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ரூ.1,088 கோடி செலவில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு அறிவித்த பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்தில் கரும்பு விடுபட்டுள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கடலூர் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
''கடந்த 2016-ம் ஆண்டு முதல் அரசின் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் கரும்பு இடம் பெற்று இருந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் சிறப்புத் தொகுப்பில் கரும்பு விடுபட்டுள்ளது கவலை அளிக்கிறது. பொங்கல் தொகுப்பை நம்பி அரசு கொள்முதல் செய்ய ஏதுவாக கரும்பு கூடுதலாக நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகள் முற்றிலும் நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு வரவுள்ள பொங்கல் பண்டிகைக்கான சிறப்புத் தொகுப்பில் கரும்பை இணைக்க வேண்டும்'' எனக் கடலூர் கரும்பு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.