

மூளை ரத்தக்குழாயில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு அதிநவீன சிகிச்சை அளித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (48), உடுமலையைச் சேர்ந்த பொன்னுசாமி (63) ஆகியோர், மூளை ரத்தக்குழாயில் உருவான பலுான் போன்ற வீக்கத்தால், வெடிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மூளையின் முக்கியமான தமனி மற்றும் சிரையில் உள்ள ரத்தம் கலந்து, இடது கண்ணில் வீக்கம், தாங்க முடியாத வலியுடன், கோவையைச் சேர்ந்த மாரியம்மாள் (38) என்பவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மூளை நரம்பியல் சிகிச்சை துறையில் நோயாளிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், நவீன பரிசோதனைகளின் மூலம் நோயின் தன்மையைக் கண்டறிந்தனர். நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ஆர்.வெங்கடேஷ் தலைமையில், மருத்துவர்கள் குழு, மயக்க மருந்து நிபுணர்கள் உதவியுடன், நோயாளிகளின் தொடைப் பகுதியில் ஊசி மூலம் நுண்ணிய குழாய்களை ரத்தக் குழாய் வழியாக மூளைக்குச் செலுத்தி, 'காய்லிங்' முறை மூலம் சிகிச்சை அளித்துச் சரி செய்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறும்போது, "இந்த நவீன சிகிச்சை முறை காரணமாக, மண்டை ஓட்டுப் பகுதியைத் திறந்து மூளையில் செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சையைத் தவிர்க்க முடிந்தது. சிகிச்சை பெற்ற மூன்று நோயாளிகளும், எந்தவிதப் பின் விளைவும் இல்லாமல் நலமாக உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாகச் செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.