

புதுச்சேரியில் நிகழாண்டில் 1,841,8 மி.மீ அளவில் மழை பொழிந்தள்ளது எனவும், மழை தாக்கத்தின் விளைவுகளை எதிர்கொள்ள அனைத்துவித முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (நவ.13) மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘புதுச்சேரியில் வடக்கிழக்கு பருவமழை அக்.26-ம் தேதி தொடங்கி பெய்து வருகிறது. இதன்படி இதுவரை 611 மி.மீ அளவில் மழை பெய்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியின் ஆண்டு சராசரி மழை அளவான 1,380 மி.மீ காட்டிலும், நிகழாண்டு 1,841.8 மி.மீ அளவில் புதுச்சேரியில் மழை பெய்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. இதில், பாகூர், ஊசுடு ஆகிய ஏரிகள் நிரம்பியுள்ளன. மேலும் ஊசுடு ஏரியிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை பாதிப்பையொட்டி மாநில பேரிடர் குழுவானது, தயார் நிலையில் இருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பொது மக்களுக்கு உதவ அவசர கட்டுப்பாட்டு மையம் திறந்து செயல்படுகிறது. அவசர உதவி மையத்தை 1070, 1077 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்.
அந்த வகையில் 78 பேர் உதவி மையத்தை தொடர்பு கொண்டுள்ளனர். அனைத்து புகார்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் மழை நீர் தேங்கிய அனைத்து இடங்களிலும், மழை வெள்ள நீர் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. இந்த மழையில் 32 குடிசைகள் உள்ளிட்ட 47 வீடுகள் இடிந்து பாதித்துள்ளன.
இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளனர். உயிர்சேதம் எதுவும் இல்லை. 194 நிவாரண முகாம்கள் மூலம் 82,083 உணவுப் பொட்டலங்கள் அரசு மற்றும் தன்னார்வர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய மழை எச்சரிக்கையை அறிவித்துள்ளது. அதன்படி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நவ.15-ம் தேதி அந்தமான் கடல் பகுதியின் மேற்கு, வடமேற்கு பக்கமாக நகர்ந்து, நவ.18-ம் தேதி ஆந்திரா அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், புதுச்சேரி அரசு நிர்வாகம் மழை தாக்கத்தின் விளைவுகளை எதிர்கொள்ள அனைத்து வித முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.
அவசர கால பணியில் ஈடுபடும் துறையினரும் களத்தில் உள்ளதால், புதுச்சேரி மக்கள் அச்சப்படத் தேவையில்லை.’’இவ்வாறு ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்தார்.