

வேண்டுதலுக்காக கதிர்காமம் முருகனுக்கு தங்கவேலை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்கியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டருகே உள்ள புதுவை கதிர்காமம் முருகன் கோயிலில் மாசிமாதம் கந்தர்சஷ்டி விழா நடந்தது.
தற்போது சஷ்டியையொட்டி அபிஷேகம், ஆராதனை நடந்து வருகிறது. சஷ்டியை முன்னிட்டு கோயிலில் யாகம் நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று கதிர்காமம் முருகனுக்கு தங்கவேல், சேவற்கொடி வழங்கினார்.
இந்த வேல், சேவற்கொடி யாகத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் யாகத்தின் கலசநீரால் முருகனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்கவேல், சேவற்கொடி சாற்றப்பட்டது.
கடந்த 2016ல் ரங்கசாமி ஆட்சியை இழந்திருந்தார். கடந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். கரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்தும் ரங்கசாமி மீண்டார். வேண்டுதலை நிறைவேற்ற கதிர்காமம் முருகனுக்கு தங்கவேலை ரங்கசாமி சாற்றியுள்ளதாக தெரிகிறது. பூஜையில் எம்எல்ஏ கேஎஸ்பி.ரமேஷ், கோயில் செயலர் பழனி ஆகியோர் பங்கேற்றனர்.