பெரியாறு அணை பிரச்சினையில் ஜெயலலிதா பெற்றுத் தந்த உரிமையை மீட்க அதிமுக தொடர்ந்து போராடும்: கம்பம் ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

கம்பம் வஉசி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். உடன், ரவீந்திரநாத் எம்பி மற்றும் முக்கிய நிர்வாகிகள்.
கம்பம் வஉசி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். உடன், ரவீந்திரநாத் எம்பி மற்றும் முக்கிய நிர்வாகிகள்.
Updated on
1 min read

பெரியாறு அணை பிரச்சினையில் ஜெயலலிதா பெற்றுத் தந்த உரிமையை மீட்க அதிமுக தொடர்ந்துபோராடும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

பெரியாறு அணையில் 142 அடிதண்ணீரை தேக்காமல் கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கம்பம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி மாவட்டம், கம்பத்தில் வஉசி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:

பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீரை தேக்க கேரள அரசு ஒத்துழைக்காததால் உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி வல்லுநர் குழு ஆய்வு செய்து அணை பலமாக இருக்கிறது என ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து 2006-ல் ஆட்சிக்கு வந்த திமுக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை துரிதப்படுத்தவில்லை. 2006-ல் கேரளாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆட்சிக்கு திமுக துணைபோனது.

2011-ல் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடினார். கடும் சட்டப் போராட்டத்தின் அடிப்படையில் 142 அடி நீரை தேக்கிக்கொள்ளலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு நமக்குக் கிடைத்தது. தீர்ப்பு வந்த ஆண்டே142 அடிக்கு நீர்மட்டம் உயர்த்தப்பட்டது.

அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட முழு அதிகாரமும் தமிழ்நாட்டுக்கே உள்ளது. ஜெயலலிதா பெற்றுத் தந்துள்ள தீர்ப்புக்கு திமுகவினர் இப்போது குந்தகம் செய்துள்ளனர்.

கேரளாவுக்கு தண்ணீர் திறந்தது குறித்து துரைமுருகன் சப்பை கட்டு கட்டிப் பேசி வருகிறார். அதிமுக ஆட்சியில் மட்டும் எப்படி 142 அடி நீரை தேக்க முடிந்தது? தென்மாவட்ட விவசாயிகளுக்கு தமிழக, கேரள அரசுகள் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. படிப்படியாக தண்ணீரை குறைப்பதே இரு மாநில அரசுகளின் எண்ணம். இதனால் 5 மாவட்ட விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். தமிழக அரசு பெரியாறு அணை உரிமையை நிலைநாட்டவில்லை.

கேரள அரசு பேபி அணையில் மரங்கள் வெட்ட அனுமதி கொடுத்ததாக சொல்கிறார்கள். அது உண்மையா எனத் தெரியவில்லை. ஜெயலலிதா பெற்றுத் தந்த உரிமையை மீட்டெடுக்க அதிமுக தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் பேசினார். தேனி எம்பி ப.ரவீந்திரநாத், மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, 8 இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தன. மதுரை முனிச்சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, டி.கல்லுப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மேலூரில் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், நிலக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தன. ராமநாதபுரம் அரண்மனை முன்பு மாவட்டச் செயலாளர் முனியசாமி, சிவகங்கை அரண்மனை வாசலில் அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in