

திருவண்ணாமலையில் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (7-ம் தேதி) இரவு தொடங்குகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. இந்த திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை (7-ம் தேதி)இரவு தொடங்குகிறது. காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மனின் உற்சவம் நடைபெற உள்ளது. பின்னர், 8-ம் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவமும், 9-ம் தேதி வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.
இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதிமுன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் 10-ம் தேதி காலை 6.30 மணிமுதல் 7.25 மணிக்குள் விருச்சிகலக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற கூடிய விநாயகர், சந்திரசேகரர் மற்றும் பஞ்சமூர்த்திகளின் உற்சவம் ஆரம்பமாகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ம்தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர்சன்னதியில் பரணி தீபமும் மற்றும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
அண்ணாமலை உச்சியில்ஜோதி வடிவமாக அண்ணாமலையாரே காட்சி கொடுப்பதால், அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதியின் நடை அடைக்கப்படும். பின்னர், மறுநாள் அதிகாலை வழக்கம்போல் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிதரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பாக, ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரும் நிகழ்வு நடைபெறும்.
இதையடுத்து, அய்யங்குளத்தில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பஉற்சவம் 20-ம் தேதி தொடங்குகிறது. பின்னர், 23-ம் தேதி வெள்ளிரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 17 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவுபெற உள்ளது.
கரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த ஆண்டை போலவே கோயிலின் 5-ம் பிரகாரத்தில் உற்சவம் நடத்தப்படும் என தெரிகிறது.