செங்கல்பட்டு வட்டாட்சியர் இடம் மாற்றப்பட்டதைக் கண்டித்து வருவாய்த் துறை அலுவலர்கள் முற்றுகை போராட்டம்: பறக்கும் படை பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டு வட்டாட்சியர் இடம் மாற்றப்பட்டதைக் கண்டித்து வருவாய்த் துறை அலுவலர்கள் முற்றுகை போராட்டம்: பறக்கும் படை பணிகள் பாதிப்பு
Updated on
1 min read

செங்கல்பட்டு வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப் பட்டதைக் கண்டித்து வருவாய்த் துறை ஊழியர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டு வட்டாட்சியர் அலுவலகத் துக்கு புதிதாக கட்டிடம் கட்டப் பட்டது. இந்த கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், அங்கு அரசின் விலையில்லாப் பொருட்களான மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலை யில், வட்டாட்சியர் அலுவலகம் பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது.

விலையில்லாப் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததால் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால், அப்போதைய செங்கல்பட்டு வட்டாட்சியர் ரவிக்குமார், விலையில்லாப் பொருட்களை கடந்த 13-ம் தேதி பழைய கட்டிடத்துக்கு இடம்மாற்றினார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் விலையில்லாப் பொருட்களை உரிய அனுமதியின்றி இடமாற்றம் செய்ததால், தேர்தல் விதிகளை மீறியதாக ரவிக்குமார் கடந்த 17-ம் தேதி தேர்தல் ஆணையம் மூலம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தேர்தல் பணிகள் அல்லாத மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவில் பணியமர்த்தப்பட்டார்.

இந்நிலையில், ரவிக்குமாரை பணியிடை நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக கூறி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராம்குமார் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் ராம்குமார் கூறியதாவது: செங்கல்பட்டு வட்டாட்சியரிடம் எந்த விதமான விசாரணையும் செய்யாமல் தேர்தல் ஆணையம் அவரை பணியிட மாற்றம் செய்துள்ளது. தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்வதற்கான முயற்சி நடந்து வருகிறது. ரவிக்குமார் மீதான நடவடிக்கையை திரும்ப பெறக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று அவர் தெரிவித்தார்.

வருவாய்த் துறை ஊழியர்களின் போராட்டத்தால், பறக்கும் படையின் வாகன சோதனை பணி பாதிக்கப்பட்டது. இதைப் பயன்படுத்தி, அரசியல் கட்சியினர் பண பரிமாற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் கேட்டபோது, “செங்கல்பட்டு வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதே போதுமானது என தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்துள்ளோம். பறக்கும் படையில் உள்ள வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் பங்கேற்றதால் பணிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in