புதுச்சேரியில் 33 எம்எல்ஏக்களுக்குத் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் 33 எம்எல்ஏக்களுக்குத் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
Updated on
1 min read

புதுச்சேரியில் 33 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைக்குப் பிறகு இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (நவ.3) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காவும், மக்களின் நலனுக்காவும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள், சட்டப்பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்பில் அரசு செயல்பட்டு வருகிறது.

அறிவித்தபடி முதியோர் உதவித்தொகை உடனடியாக உயர்த்தி வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள 33 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழை முடிந்தபிறகு இதற்கான பணிகள் தொடங்கும்.

இதேபோல் பொதுப்பணித் துறைக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சாலைகளை மேம்படுத்தவும், பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி அரசில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். காவல்துறை பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த அரசு புதுச்சேரியைச் சிறந்த மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. புதுச்சேரியில் தற்போது தொற்று குறைந்து வருகிறது. கரொனா தொற்று இல்லாமல் இருக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

புதுச்சேரிக்குத் தேவையான தடுப்பூசிகள் உள்ளன. கரோனா தொற்றில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளத் தடுப்பூசி ஒன்றே கவசம். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் சிறப்பாக இருப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். நிறைவேற்றி வருகிறோம்.’’

இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in