

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரள அரசின் தன்னிச்சையான முடிவை அமைச்சர் துரைமுருகன் மறைக்கிறார் என, அதிமுக
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடி. 142 அடியாக தேக்கிக்கொள்ளலாம் என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா பெற்றுத் தந்தார். தற்போது மழையால் அணை நீர்மட்டம் 138.85 அடியாக உயர்ந்தது. கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அணையைப் பார்வையிட்டு 142 அடியை எட்டாமலே கேரளா பகுதிக்குத் தண்ணீரைத் திறந்துள்ளார். இது வரை 6 ஷட்டர்கள் வழியாக 3 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேரளப் பகுதிக்கு உட்பட்ட வண்டிப்பெரியாறு, மஞ்சுமலை, சப்பாத்து, உப்புத்துறை ஆகிய கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று, பெரியாறு அணையைத் திறந்தது தமிழகம் எனக் கூறுகிறார். முல்லைப் பெரியாறு பகுதியில் கேரள அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். அணையில் 142 அடியைத் தேக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு இருந்தும், கேரள அரசு பிடிவாதம் செய்து, வதந்திகளைப் பரப்புகிறது.
கேரள அரசு தன்னிச்சையாகத் தண்ணீரை திறந்ததால் தமிழக 5 மாவட்ட விவசாயிகள் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. தண்ணீர் திறந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு, கடமை அரசுக்கு உள்ளது. உண்மை நிலையை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட்கள் கூட்டணியில் திமுக இருப்பதால் வாய் திறக்க அஞ்சுகின்றனர். மேலும், ரூ. 1,500 கோடியில் கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சிக்கிறது. தமிழக அரசு 142 அடியை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும். முல்லைப் பெரியாறு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை நிவர்த்தி செய்யாவிடின் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பர்’’.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.