சிறையிலிருந்து குற்றச் செயல்கள் நிகழ்த்தப்பட்டால் சிறை நிர்வாகத்தின் மீது முதலில் வழக்குப் பதிய வேண்டும்: புதுவை முதல்வரிடம் அதிமுக மனு

சிறையிலிருந்து குற்றச் செயல்கள் நிகழ்த்தப்பட்டால் சிறை நிர்வாகத்தின் மீது முதலில் வழக்குப் பதிய வேண்டும்: புதுவை முதல்வரிடம் அதிமுக மனு
Updated on
1 min read

சிறையிலிருந்தபடி குற்றச் செயல்கள் நிகழ்த்தப்பட்டால், சிறை நிர்வாகத்தையே பொறுப்பாக்கி அவர்கள் மீது முதலில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனப் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக்.30) முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு அளித்துள்ள கடிதத்தில் கூறியதாவது:

"புதுச்சேரியில் நடைபெறும் எந்தக் கொலையாக இருந்தாலும் அதன் சதித்திட்டம் சிறையில் இருந்து நடைபெறுகிறது என ஒவ்வொரு வழக்கிலும் காவல்துறை தெரிவிப்பதும், அது சம்பந்தமாக சிறையில் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்வதும் தொடர்கதையாக உள்ளது.

சிறையில் உள்ள குற்றவாளிகளால் வெளியில் உள்ளவர்களை வைத்து கொலைக் குற்றம் நடத்தப்படுகிறது என்றால் அதன் முழுப் பொறுப்பும் சிறை நிர்வாகத்தையே சாரும். குற்றம் நடந்தவுடன் சிறையில் இருந்து செல்போன் எடுப்பது, சிறையில் உள்ள குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு என்பது கண்துடைப்பு நாடகமாக உள்ளது.

பாதுகாக்கப்பட்ட சிறையில் நிர்வாகத்தின் முழுப் பொறுப்பும் சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் அங்குள்ள சிறைப் பாதுகாவலர்களையே சாரும். சிறையிலிருந்து இதற்கு மேலும் குற்றச் செயல் ஈடுபடுத்தப்பட்டால் ஒட்டுமொத்தமாக இந்தக் குற்றச் செயலுக்குப் பொறுப்பாக சிறை நிர்வாகத்தையே பொறுப்பாக்கி அவர்கள் மீது முதலில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் நிர்வாகம் முழுமையாகத் தோல்வியடைந்த நிலையில், மத்திய அரசின் நேரடியான கட்டுப்பாட்டில் சிறை நிர்வாகம் செயல்பட மாநில அரசு அனுமதிக்க வேண்டும். புதுச்சேரி சிறையில் நிர்வாகப் பாதுகாப்பு முழுவதும், விமான நிலையப் பாதுகாப்பு போன்று மத்தியக் காவல் படையின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

புதுச்சேரி பிராந்தியம் காவல்துறை நான்கு கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் மூன்று கண்காணிப்பாளர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களது பணியைக் குறைகூறவில்லை. அவர்களுக்குப் பெரும்பாலும் உள்ளூர் குற்றவாளிகள் பற்றித் தெரிய வாய்ப்பில்லாததால் குற்றச் செயல் அதிகமாக நடக்கின்றது.

குற்றவாளிகளுடன் தொடர்பில்லாத உள்ளூர் கண்காணிப்பாளர்களை நகரப் பகுதிகளில் கண்காணிப்பாளராக நியமனம் செய்வது அவசியமானதாகும். புதுச்சேரியில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைப்பதும், அதன் மூலம் இளைஞர்கள் சீரழிவதும் தொடர் கதையாகி வருகிறது.

சுற்றுலா நகராக உள்ள புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது என விமர்சனம் செய்யும் நிலையில் குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவது தவறான ஒன்றாகும். புதுச்சேரி மாநிலத்தில் கூலிப்படையினரின் ஆதிக்கம் மற்றும் தொடர் குற்றம் புரிவோர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். முதல்வர், உள்துறை அமைச்சர், காவல்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை உள்ளிட்டவர்களின் கூட்டு ஆலோசனை கூட்டத்தைக் கூட்டி சரியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்”.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in