

சிறார் நீதிமுறை ஆணையத்தில் நிலுவை வழக்குகளை முடிக்க மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவர் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த அக்.29 முதல் 30 வரையில் கீழ்க்காணும் முக்கியக் கோப்புகளுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் அட்டவணை இனத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு 530 வீடுகள் கட்ட மத்திய அரசு மானியத்தின் இரண்டாம் தவணையாக ரூ.115.20 லட்சம் விடுவிக்கவும், விடுமுறை இயற்கைப் பேரிடர் கால நிவாரணம் மற்றும் மீனவர் நலத் திட்டத்தின் கீழ், மீன்பிடி நடவடிக்கைகளின்போது உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்துக்கு உடனடி இறப்பு நிவாரண நிதியுதவியாக ரூ. 2 லட்சம் வழங்க மீன்வளத் துறையின் முன்மொழிவுக்கும் ஒப்புதல் தந்துள்ளார்.
புதுச்சேரி சிறார் நீதிமுறை ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை முடிப்பதற்காக, சிறார் நீதிமுறைச் சட்டம் 2015 -ன் கீழ் மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவரின் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பாண்டெக்ஸ், பாண்பேப் மற்றும் தொடக்கநிலை நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நிதியுதவி அளிக்க நிதிக் கொடையாக ரூ.46.30 லட்சம் விடுவிக்க ஒப்புதல் கொடுத்துள்ளார்.
கால்நடை மருத்துவத் துறையில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டுள்ள 7 கால்நடை உதவி மருத்துவர்களின் பணிக் காலத்தை 120 நாட்களுக்கு நீட்டிக்கவும், சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு இணையாக அவர்களது மாதாந்திர சிறப்பூதியத்தை ரூ.25,000லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான முதல்வரின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இத்தகவலை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.