

பவானி அருகே கார் - லாரி மோதிக்கொண்ட விபத்தில், அரசு பெண் மருத்துவர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி, உடையானூரைச் சேர்ந்தவர் தேவநாதன் (53). தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி இந்திராணி (51), மேட்டூரை அடுத்த வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும், நேற்று (அக். 28) இரவு கோவையில் இருந்து காரில் மேட்டூர் திரும்பியுள்ளனர். இவர்களுடன் தேவநாதனுடன் பணிபுரியும் ஊழியர் சத்தியசீலன் (24) என்பவரும் பயணித்துள்ளார்.
காரை தேவநாதன் ஓட்டி வந்த நிலையில், பவானி - மேட்டூர் சாலையில், காடப்பநல்லூர் பிரிவு அருகே, எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இதில், காரின் முன்பகுதி, லாரியின் முன்பகுதியில் சிக்கி முழுமையாக சேதமானது.
பவானி போலீஸார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விபத்துக்குள்ளான காரை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். இவ்விபத்தில் காரில் பயணித்த மூவரும் உயிரிழந்தனர். லாரியை ஓட்டி வந்த கேரளாவைச் சேர்ந்த ஓட்டுநர் தப்பியோடி விட்டார். இந்தச் சம்பவம் குறித்து பவானி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.