

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு பணியாளர் நடத்தை விதி
தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகளின்படி ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை உரிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் துறைசார்ந்த பணியாளர்கள் அனைவரும் தங்கள் சொத்து மற்றும் கடன் விவரஅறிக்கையை உரிய காலத்தில்சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பார்வைக்கு...
இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘வழக்கமான இந்தபணிகளை அரசு தற்போது தீவிரப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. வேட்புமனு தாக்கலின்போது குறிப்பிடுவதைபோல் பணியாளர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களையும் சேகரிப்பதுடன், பொதுவெளியில் அவற்றை மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். அப்போதுதான் தவறுகள் நடைபெறுவதைத் தவிர்க்க முடியும்.
மேலும், ஆசிரியர்கள் புதிதாக ஏதேனும் சொத்துகள் வாங்கும் விவரங்களை தெரிவித்தால் அதை முறையாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்’’ என்றார்.