மீன்பிடி படகுகளில் பயன்படுத்த உற்பத்தி விலைக்கு டீசல் வழங்கப்படுமா?- பசுமை, சாலை வரிகளை ரத்து செய்ய மீனவர்கள் கோரிக்கை

மீன்பிடி படகுகளில் பயன்படுத்த உற்பத்தி விலைக்கு டீசல் வழங்கப்படுமா?- பசுமை, சாலை வரிகளை ரத்து செய்ய மீனவர்கள் கோரிக்கை
Updated on
1 min read

மீன்பிடி படகுகளில் பயன்படுத்தப்படும் டீசல், உற்பத்தி விலைக்கு வழங்கப்படுமா என்று மீனவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு, பைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். விசைப்படகு மூலம் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு சென்று பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து வருகின்றனர்.

இவ்வாறு, ஆழ்கடலுக்குச் செல்லும் மீனவர்கள், டீசல் விலை உயர்வால் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே, மீன்பிடி படகுகளில் பயன்படுத்தும் டீசல், உற்பத்தி விலைக்கு வழங்கப்படுமா என்று மீனவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக, மீனவ மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ரூபேஷ் குமார் கூறியதாவது:

விசைப்படகில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் ஒரு மாதத்துக்கு குறைந்தது 2 முறை மீன்பிடிக்க கடலுக்கு செல்வதாக வைத்துக்கொண்டால் ஒரு படகுக்கு குறைந்தது 8 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இன்றைக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் டீசலில் பசுமை வரி, சாலை வரி உள்ளிட்ட வரிகளாக மட்டுமே ரூ.58 வரை செலுத்த வேண்டியுள்ளது. இதன்படி, பார்த்தால் ஒரு மாதத்துக்கு ரூ.240 கோடி அளவுக்கு வரியாக மத்திய அரசுக்கு மீனவர்கள் அளித்து வருகிறோம்.

படகுகளை நாங்கள் சாலையில் ஓட்டுவதில்லை. மேலும், படகுகளை இயக்குவதால் எந்த மாசும் ஏற்படுவதில்லை. அவ்வாறு இருக்க இந்த 2 வரிகளையும் வசூல் செய்வது எந்த வகையில் நியாயம். பிற எந்த வரிகளையும் நாங்கள் ரத்து செய்யும்படி நாங்கள் கூறவில்லை.

தனியார் கப்பல்களுக்கு உற்பத்தி விலையில் டீசல் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும்போது, சாதாரண மீன்பிடி படகுகளுக்கு உற்பத்தி விலையில் டீசலை அளிப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் இருக்கப் போகிறது. மீன்பிடி தொழிலில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். எனவே, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும் மீன்பிடி தொழிலை ஊக்குவிக்க டீசலை உற்பத்தி விலைக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, முன்னாள் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, “மீனவர்களுடைய கோரிக்கை நியாயமானதுதான். மானிய விலையில் மீனவர்களுக்கு அளிக்கப்படும் டீசலுக்கான அளவு உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை இதுவரை திமுக அரசு நிறைவேற்றாமல் உள்ளது. இந்த கோரிக்கையை மீனவர்களின் சுமையை குறைக்கும் வகையில் மாநில அரசு நிறைவேற்றுவது நல்ல விஷயமாக இருக்கும்.

மீனவர்கள் பயன்படுத்தும் டீசலுக்கான மாநில அரசு வரிகளை தள்ளுபடி செய்துவிட்டு மத்திய அரசு வரிகளை கணக்கிட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு வழங்கலாம். இதனால் மீனவர்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in