முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை வருகை: தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்

முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை வருகை: தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்
Updated on
1 min read

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் நடக்கும் குருபூஜை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக அவர் நாளை மதியம் மதுரை வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகில் பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி, 59-வது குருபூஜை விழா இன்று தொடங்கியது. 30ஆம் தேதி வரை தொடர்ந்து விழா நடக்கிறது. இதையொட்டி தேவர் நினைவிடத்தில் நாளை (அக்.29) சசிகலா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

இதனிடையே நாளை மறுதினம் (அக்.30) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன்னுக்கு நேரில் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்கிறார். முன்னதாக அவர் சிவகங்கை மாவட்டம், கீழடி பகுதியில் அகழாய்வு இடத்தை ஆய்வு செய்தல் உள்ளிட்ட ஓரிரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் நாளை (அக்.29) காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் சுமார் 12.30 மணிக்கு மதுரைக்கு வருகிறார். அவரை அமைச்சர்கள், ஆட்சியர், அதிகாரிகள் வரவேற்கின்றனர். பின்னர் கார் மூலம் மதுரை அழகர்கோயில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார். இதைத் தொடர்ந்து மாலையில் கீழடி அகழாய்வு நடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

இதன்பின், மீண்டும் அரசு சுற்றுலா மாளிகைக்குத் திரும்பும் முதல்வர், இரவில் அங்கு தங்குகிறார். பசும்பொன்னுக்கு புறப்பட்டுச் செல்லும் வழியில் காலை 8 மணிக்கு மேல் கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கும், தெப்பக்குளத்திலுள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கும் அவர் மாலை அணிவிக்கிறார். பசும்பொன்னிலுள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். பிறகு அவர் கார் மூலம் மதுரை வந்து, விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

முதல்வர் வருகை மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருவதால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in