பட்டாசு வெடித்து 7 பேர் பலியான விவகாரம்: கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

சங்கராபுரம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடம்.
சங்கராபுரம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடம்.
Updated on
1 min read

மளிகைக் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசு வெடித்து 7 பேர் பலியான விவகாரம் தொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்கக் கோரி, மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர், மளிகைக் கடையில் பட்டாசு விற்பனை நடத்தி வந்தார். இந்தக் கடையில் கடந்த 26-ம் தேதி இரவு பட்டாசு வெடித்துச் சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள பேக்கரி கடைக்கும் பரவியதைத் தொடர்ந்து, பேக்கரி கடையில் இருந்த 8 எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துச் சிதறின. இதில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது மட்டுமின்றி, பக்கத்துக் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.

இதனால் பட்டாசுக் கடை, செல்போன் கடை மற்றும் பேக்கரிகளில் பணியாற்றி வந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசுக் கடையின் வெளியே பூ விற்றுக் கொண்டிருந்தவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த பட்டாசுக் கடை உரிமையாளர் செல்வகணபதி கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பட்டாசு வெடித்து உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி, 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் இன்று (அக். 28) உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in