சங்கராபுரம் பட்டாசுக் கடை உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

சங்கராபுரம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடம்.
சங்கராபுரம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடம்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசுக் கடையில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தது தொடர்பாக கடையின் உரிமையாளர் செல்வகணபதி மீது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வெடிபொருட்கள் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் மளிகைக் கடையில் மேல் தளத்தில் பட்டாசு விற்பனை நடத்தி வந்தார். இந்தக் கடையில் நேற்று முன்தினம் இரவு பட்டாசு வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள பேக்கரி கடைக்கும் பரவியதைத் தொடர்ந்து, பேக்கரி கடையில் இருந்த 8 எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துச் சிதறின. இதில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது மட்டுமின்றி, பக்கத்துக் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.

இதனால் பட்டாசுக் கடை உட்பட செல்போன் கடை மற்றும் பேக்கரிகளில் பணியாற்றி வந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசுக் கடையின் வெளியே பூ விற்றுக் கொண்டிருந்தவர் உட்பட சுமார் 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த பட்டாசுக் கடை செல்வகணபதி கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீயை அணைக்கும் பணியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சம்பவத்தை அறிந்த உடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, சங்கராபுரம் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்யும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில், சங்கராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் அளித்த புகாரின் பேரில் கடையின் உரிமையாளர் செல்வகணபதி மீது அளவுக்கு அதிகமாக வெடி பொருட்கள் வைத்திருந்ததாக 5 பிரிவுகளில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in