ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 வழக்குகளில் தொடர்பு: சென்னையில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் கைது

சுகூர் கஞ்ச்
சுகூர் கஞ்ச்
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 13 வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்ட், சென்னையில் கட்டுமானத் தொழிலாளியாக பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுகூர் கஞ்ச் (40). இவர் அங்கு மாவோயிஸ்ட் இயக்க நிர்வாகியாக இருந்தார். இவர் அரசுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஜார்கண்ட் மாநில காவல் துறையினர் இவர் மீது வழக்குப்பதிவு செய்து, தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சென்னை எண்ணூரில் நடைபெற்று வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒருவராக சுகூர் கஞ்ச் இருந்துள்ளார்.

இதையறிந்த ஜார்க்கண்ட் மாநில போலீஸார், சென்னை போலீஸாருக்கு தகவல் அனுப்பினர். இதன் அடிப்படையில் எண்ணூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலையில் சென்று சுகூர் கஞ்ச்சை கைது செய்தனர்.

சுகூர் கஞ்ச் மீது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு, ஒரு வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. இவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகியாக இருப்பதும் போலீஸாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகூர் கஞ்ச், தனது செல்போன் மூலம் சென்னையிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் தனது மனைவியிடம் பேசியுள்ளார். இதை நோட்டமிட்ட ஜார்க்கண்ட் மாநில காவல்துறை, சென்னை காவல்துறைக்கு தகவல் அளித்து, எண்ணூர் போலீஸார் மூலம் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

6 மாதங்களாக..

சுகூர் கஞ்ச், சென்னையில் கடந்த 6 மாதங்களாக பதுங்கி இருந்துள்ளார். இதற்காக அவர், எண்ணூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டுமானத்தில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்து இருப்பதும், அதற்காக சில போலி ஆவணங்களை அந்த நிறுவனத்திடம் சமர்ப்பித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in