பி.ஆர்க். படிப்புக்கான கலந்தாய்வில் ஜெஇஇ எழுதியவர்களையும் அனுமதிக்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பி.ஆர்க். படிப்புக்கான கலந்தாய்வில் ஜெஇஇ எழுதியவர்களையும் அனுமதிக்க வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

நடப்பு கல்வியாண்டில் பி.ஆர்க். படிப்புக்கான கலந்தாய்வுக்கு, ஜெஇஇ நுழைவுத்தேர்வு எழுதியமாணவர்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை பி.ஆர்க். படிப்பில் நாட்டா(NATA) அல்லது ஜெஇஇ (JEE)நுழைவுத்தேர்வில் தகுதிபெற்ற மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். ஆனால் நடப்பு கல்வியாண்டில் (2021-22) பி.ஆர்க். படிப்புக்கான கொள்கை விளக்கக் குறிப்பில், நாட்டா நுழைவுத்தேர்வில் தகுதிபெற்றவர்கள் மட்டுமே இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இதை எதிர்த்து, அகாடமிக் சொசைட்டி ஆஃப் ஆர்க்கிடெக்ட் என்ற அமைப்பும், மெய்யம்மை என்ற மாணவியும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அதில், பிற மாநிலங்களில் ஜெஇஇ தேர்வு எழுதியவர்களும் பி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் நாட்டா தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறுவது சட்டவிரோதமானது.

எனவே, ஜெஇஇ தேர்வில் தகுதி பெற்றவர்களையும் இதற்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கறிஞர் என்.முரளிகுமரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

மத்திய அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனும், தமிழக அரசுதரப்பில் வழக்கறிஞர் ஏ.செல்வேந்திரனும் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், பி.ஆர்க். படிப்புகளுக்கான கலந்தாய்வில் நாட்டா அல்லது ஜெஇஇ நுழைவுத் தேர்வில் பங்கேற்று, அதில் தகுதி பெற்றவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.

தீர்ப்புக்கு கட்டுப்பட்டது

மாணவர் சேர்க்கை என்பது இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. ஜெஇஇ தகுதித்தேர்வில் தகுதி பெற்ற வர்களால் ஆன்லைன் மூலம் இனி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது என்பதால், அவர்கள் நேரடியாக சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவ. 9-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in