

கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, பட்டாசுக் கடைகளில் தயாரிப்பும் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடைகளில் தொழிலாளர்கள் இரவும், பகலுமாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
விபத்து நடந்த பட்டாசுக் கடையின் அருகில் உள்ள பேக்கரி கடையில் இருந்த எரிவாயு சிலிண்டரும், விபத்தின்போது வெடித்துச் சிதறியது. இதனால் சேதம் அதிகரித்து வருகிறது. மீட்புப் பணியில் தொய்வும் ஏற்படுள்ளது.