

தமிழகத்தில் நிலக்கரிப் பற்றாக்குறை வராது என்றும், சீரான மின் விநியோகம் இருக்கும் எனவும் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குதல், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குதல், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’அனல் மின் நிலையங்களைப் பொறுத்தவரை மின்வாரியத்தின் நிறுவுதிறன் 4,320 மெகாவாட் ஆகும். கடந்த ஆட்சியில் 1,800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 மாத காலத்துக்குள் 3,500 மெகாவாட்டாக நாங்கள் உற்பத்தியை உயர்த்தி இருக்கின்றோம். தமிழகத்தில் தற்போது 4 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை நிலக்கரிப் பற்றாக்குறை என்பது வராது. சீரான மின் விநியோகம் இருக்கும். மின்வாரியத்தில் 1.46 லட்சம் பணியிடங்களில் 56 ஆயிரம் பணியிடம் காலியாக உள்ளன. மின்வாரியத்துக்கு இருக்கும் கடனிற்கு 13 சதவீதம் வரை வட்டி கட்டி வருகின்றோம்.
வெளிப்படைத் தன்மை
மின்சார வாரியத்தில் செலவீனங்களைக் குறைக்க வெளிப்படைத் தன்மையுடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்றதாக 134 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாத காலத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கோவையில் சூயஸ் குடிநீர் திட்டம் விவகாரம் குறித்து ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்பு, முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.