எந்தக் கட்சியிலும் இல்லாதது மதிமுகவில் நடைபெற்றது; சிலர் வெளியேறுவதால் கட்சி பிளவுபடாது: வைகோ பேட்டி

எந்தக் கட்சியிலும் இல்லாதது மதிமுகவில் நடைபெற்றது; சிலர் வெளியேறுவதால் கட்சி பிளவுபடாது: வைகோ பேட்டி
Updated on
1 min read

கட்சியை விட்டு சிலர் வெளியேறுவதால் கட்சி பிளவுபடாது என மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதுரை அவனியாபுரம் அருகே மதுரை தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் கதிரேசனுக்குப் புகழஞ்சலி நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார்.

இதற்காக விமானம் மூலம் மதுரை வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’கட்சியின் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாக்கெடுப்பு ஓட்டுப் பெட்டி வைத்து 106 பேர் பங்கேற்றதில், 104 பேர் வாக்களித்தனர். பொதுச் செயலாளரை நேரடியாகவே நியமனம் செய்யலாம். பொதுச் செயலாளர் என்ற முறையில் நேரடியாக நியமனம் செய்து இருக்கலாம். ஆனால், முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

எந்தக் கட்சியிலும் இல்லாதது மதிமுகவில்தான் நடைபெற்றது. கட்சித் தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ பங்கேற்றுள்ளார். அவரை மாவட்டச் செயலாளர்கள் வரவேற்று அவருக்கு உரிய பதவி அளிக்க வேண்டும் எனக் கூறியதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் துரை வைகோ அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனாலும், அவர் அரசியலுக்கு வருவதற்குக் கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர்.

அரசியலில் விமர்சனங்கள் வருவது சகஜம். தனிப்பட்ட முறையில் என்னை விமர்சனம் செய்கின்றனர். சில பேர் கட்சியை விட்டுச் செல்வதால் கட்சி பிளவுபடும் என்பதல்ல. தொடர்ந்து வலுவாகவே உள்ளது. வாக்கெடுப்பில் பங்கேற்க முடியாத சிலர் வாட்ஸ் அப் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச விமான நிலையத்திற்கு ராஜபக்ச வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். தற்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் நேரடியாகச் செல்ல முடியவில்லை. இல்லையெனில் கடந்த முறை சாஞ்சியில் நடந்ததுபோன்று 1500 பேருடன் சென்று எதிர்ப்பு தெரிவிப்போம். நவம்பர் 1-ம் தேதி லண்டனுக்குச் செல்லும் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அங்குள்ள தமிழர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்’’.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து சோதனை நடப்பது குறித்த கேள்விக்கு, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்று வைகோ தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in