Published : 20 Oct 2021 03:08 AM
Last Updated : 20 Oct 2021 03:08 AM

கோட்டைப்பட்டினம் மீனவர்களின் படகை இடித்து மூழ்கடித்த இலங்கை கடற்படையினர்: 2 பேரை பிடித்துச் சென்றனர்; மற்றொரு மீனவர் மாயம்

புதுக்கோட்டை

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களின் படகு மீது நடுக்கடலில் ரோந்துப் படகை மோதி இலங்கை கடற்படையினர் மூழ்கடித்த நிலையில், கடலில் தத்தளித்த 2 பேரைஇலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் ஒரு மீனவரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதில், எஸ்.சவுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ் மகன் ராஜ்கிரண்(30), சுதாகர் மகன் சுகந்தன்(30), அருளானந்தன் மகன் சேவியர்(32) ஆகிய 3 பேரும் கடலில் சுமார் 17 கடல் மைல் தொலைவில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்களது ரோந்து படகு மூலம் மீனவர்களின் படகு மீது இடித்ததாக கூறப்படுகிறது. அதில், படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, 3 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இவர்களில் சுகந்தன், சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு, காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஒப்படைத்தனர். மற்றொரு மீனவர் ராஜ்கிரணை காணவில்லை. அவரது நிலை என்னெவென்று உடனடியாக தெரியவில்லை.

மீனவர்கள் மறியல்

இதுகுறித்து தகவலறிந்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள், இலங்கை கடற்படையைக் கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் மீன்வளத் துறை, வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை கடற்படையினரின் செயல் கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x