‘போலீஸ் நினைத்திருந்தால் மாணவர் கொலையை தடுத்திருக்க முடியும்’- உள்ளூர் பிரமுகர்கள் தகவல்

‘போலீஸ் நினைத்திருந்தால் மாணவர் கொலையை தடுத்திருக்க முடியும்’- உள்ளூர் பிரமுகர்கள் தகவல்

Published on

காதல் திருமணம் செய்து கொண்ட இருவரையும் கொலை செய்துவிடுவ தாக சில மாதங்களுக்கு முன்பே பகிரங்க மிரட்டல் இருந்ததாக உள்ளூர் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

உடுமலை அருகே குமரலிங்கத்தைச் சேர்ந்த மாணவர் சங்கர், தன்னுடன் பயின்ற பழநியைச் சேர்ந்த கவுசல்யா(19) என்ற பெண்ணை கலப்புத் திருமணம் செய்து கொண்டார். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் பெற்றோரிடம் இருவரும் இதை தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு பெண் வீட்டார் தரப்பில் இருந்து, குமரலிங்கத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மூலம் பேச்சு நடத்தி அவரை அழைத்துச் செல்வதற்கான முயற்சி கள் நடைபெற்றதாம். அது கைகூடாத நிலையில், இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து குமரலிங்கத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் கூறியதாவது:

திருமணம் நடைபெற்ற ஓரிரு நாளில் பெண்ணின் தாத்தா மற்றும் அவரது உறவினர்கள் குமரலிங்கத்துக்கு வந்தனர். உள்ளூரில் உள்ள உறவினர் ஒருவர் மூலம் அவர்கள் வந்ததால் வேறு வழியின்றி பஞ்சாயத்து பேசப்பட்டது. அதில், பெண்ணின் விருப்பம் இருந்தால் அழைத்துச் செல்லுங்கள் என்றோம். ஆனால், கணவனுடன் வாழ விரும்புவதாக பெண் உறுதியாகத் தெரிவித்துவிட்டார். அதனால், பெற்றோருடன் அனுப்பவில்லை. அவர்களும் திரும்பிச் சென்றனர்.

அதன் பிறகு ஓரிரு நாட்கள் கழித்து வந்த பெண்ணின் உறவினர்கள், ‘வசதியாக வாழ்ந்த எங்கள் மகள் குடிசைப் பகுதியில் வசிப்பது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. எங்களுக்கும் வந்து பார்த்துச் செல்ல கஷ்டமாக உள்ளது. அதனால் அருகில் உள்ள மடத்துக்குளத்தில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்க வைத்தால், அடிக்கடி நாங்களும் வந்து பார்த்துச் செல்ல ஏதுவாக இருக்கும்’ என்றனர்.

அவர்களின் வார்த்தையை நம்பி கவுசல்யாவையும், அவருடன் துணைக்கு குமரலிங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் அனுப்பி வைத்தோம். சென்ற சிறிது நேரத்தில், உடன் சென்ற பெண்ணை பாதி வழியில் இறக்கிவிட்டு கவுசல்யாவை பழநிக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அதன் பிறகு அங்கிருந்து தப்பி குமரலிங்கத்தில் உள்ள தனது கணவரின் வீட்டுக்கு வந்த கவுசல்யா, ‘ஏற்கெனவே தனது குடும்பத்தில் காதல் திருமணம் செய்த ஒன்றுவிட்ட சகோதரியும் கொலை செய்யப்பட்டார். அங்கு சென்றால் அதே கதிதான் எனக்கும் நேரும். என்னை இனி எனது பெற்றோருடன் அனுப்ப வேண்டாம்’ என்றார்.

அதன் பிறகு இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறும் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, ‘இருவரையும் இன்றைக்கு இல்லை, என்றாவது ஒரு நாள் கொலை செய்துவிடுவதாக’ பகிரங்க மிரட்டல் இருந்தது.

ஆனால், அதன் பிறகு 7 மாதங்களாக எவ்வித இடையூறுகளும் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்படி படுகொலை செய்வார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை’ என்றனர் ஆதங்கமாக.

பாதுகாப்பு கோரிய மனு மீது போலீஸார் உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லாமல் தடுக்கப்பட்டிருக்கும் என்பதே அப் பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in