

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருகின்றனர். வெளி மாநிலம், வெளிநாடு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளும் தங்கும் வகையில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் 53 ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.
மாமல்லபுரம், கோவை, கன்னியாகுமரி, கொடைக்கானல், மதுரை, ராமேசுவரம், திருச்செந்தூர், திருச்சி உள்ளிட்ட 25 இடங்களில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்கள், சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. மீதமுள்ளவை தனியாருக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. 2018-ல் 38 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 60 லட்சம் வெளிநாட்டவரும் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை 2019-ல் 49 கோடியாகவும், 68 லட்சமாகவும் அதிகரித்தது. 2016 முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. ஆனால், 2020-ல் கரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதால், பயணிகளின் வருகை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இந்நிலையில், தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், சுற்றுலாத் தலங்கள் மீதான தடைகளை அரசு தளர்த்தி வருகிறது. இதனால், தமிழகத்துக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சுற்றுலாத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் 25 ஹோட்டல்களின் வருவாய் கடந்த 10 ஆண்டுகளாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இதுகுறித்து ஹோட்டல் மேலாளர்கள் சிலர் கூறியதாவது: கண்ணாடியால் அலங்காரம் செய்யப்பட்ட கட்டிடம், பளிங்குக் கற்கள் பதித்த அறைகள் போன்றவற்றைத்தான் சுற்றுலாப் பயணிகள் விரும்புகிறார்கள். ஆனால், தமிழ்நாடு ஹோட்டல்களில் பெரும்பாலானவை 30 ஆண்டுகள் பழைய கட்டிடத்திலே இயங்குகின்றன. ஹோட்டல் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவதால், தரமான உணவு வகைகளை, சரியாக உபசரிப்புடன் பரிமாறுவதில்லை.
குழந்தைகளை கவர்வதற்காக விளையாட்டு அரங்கம், பூங்கா போன்ற வசதிகளும் இல்லை. கன்னியாகுமரி,ஏற்காடு உள்ளிட்ட 8 ஹோட்டல்களில் மட்டுமே வைஃபை வசதி உள்ளது. மேலும், உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடும் அதிகமாக உள்ளது. இதனால் விழாக் காலங்களில் பொதுமக்கள் ஹோட்டலில் அறை எடுக்க முடியாதநிலை ஏற்படுகிறது. அரசுப் பயணமாக வரும் அதிகாரிகளே, தமிழ்நாடு ஹோட்டல்களில் தங்குவதில்லை. பிற தனியார் ஹோட்டல்களைக் காட்டிலும் தமிழ்நாடு ஹோட்டல்களின் கட்டணம் குறைவாக இருந்தபோதிலும், பயணிகள் இவற்றை விரும்பவில்லை. இவ்வாறு வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து, கடும் வருவாய் இழப்பை தமிழ்நாடு ஹோட்டல்கள் சந்தித்து வருகின்றன என்றனர்.
தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி கூறும்போது, ``முதல்கட்டமாக ஹோட்டல்களின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், கண்கவர் கட்டிடங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஹோட்டல்களின் வருவாயை அதிகரிக்கும் வகையில் திருச்சி, மாமல்லபுரம், மதுரை, கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டல்களில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்குத் தேவையான திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட உள்ளது. ஒகேனக்கல்லில் 4 புதிய சொகுசு அறைகள், திருச்சியில் 15 அறைகள் கொண்ட சுற்றுலா உணவகம், விருந்தினர் அரங்கம் அமைத்தல், கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா பாரம்பரிய மையத்தைப் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதேபோல, ஹோட்டல்களில் இணையவழியில் முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், ஹோட்டல் பராமரிப்பு சேவை, உணவு தயாரிப்பு, வரவேற்பறை உபசரிப்பு குறித்து, நட்சத்திர ஹோட்டல்களின் பணியாளர்கள் மற்றும் விருந்தோம்பல் பயிற்சியாளர்களால் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 25 ஹோட்டல்களிலும் சுற்றுலாத் துறை அமைச்சர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட உள்ளது'' என்றார்.