சிறைவாசம் நம்மை புதுப்பித்துக் கொள்வதற்கு உதவ வேண்டும்: புதுவை ஆளுநர் தமிழிசை பேச்சு  

சிறைவாசம் நம்மை புதுப்பித்துக் கொள்வதற்கு உதவ வேண்டும்: புதுவை ஆளுநர் தமிழிசை பேச்சு  
Updated on
1 min read

புதுச்சேரியில் மாதிரி சிறைச்சாலைத் திட்டத்தின் கீழ், அரவிந்தர் குழுமம் மற்றும் சிறைத்துறை ஏற்பாடு செய்த "ஜெயில் மஹோத்சவ்" நிகழ்ச்சி இன்று(அக். 9) நடைபெற்றது.

இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பார்வையளர் அறை, கண்காணிப்பு அறை, பெண்கள் சிறை வளாகம், நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பேசியதாவது:‘‘சூழ்நிலை காரணமாக சிலர் கைதிகளாகிறார்கள். கண நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத கோபத்தினால் தவறிழைத்து விடுகிறார்கள்.

குற்றவாளியாக யாரும் பிறப்பதில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் குற்றம் செய்ய அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அதற்கு அவர்கள் சார்ந்த சூழலும், சமூகமும் கூட காரணம். பல தேசியத் தலைவர்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளனர். சிறைவாசம் நம்மை புதுப்பித்துக்கொள்வதற்கு உதவ வேண்டும்.

காந்தி சிறையில் இருந்த காலத்தில், ஒரு நிமிடம் கூட வீணடித்தது கிடையாது. நேரத்தை வீணடிக்காமல் சிறைத் துறை அதிகாரிகளின் உதவியோடு பொம்மை, மிதியடிகள் தயாரிப்பு, விவசாயம், ஓவியம், யோகா கற்றுக் கொள்ளுதல் என பலவற்றை இங்குள்ள கைதிகள் செய்வது மகிழ்ச்சியைத் தருகிறது.

குடும்பத்துக்கு பயனுள்ளவர்களாக உங்கள் நேரத்தை மிக சிறப்பாக செலவழித்து வருகிறீர்கள். சிறை அனுபவம், நமது வாழ்க்கையில் புது அனுபவத்தைத் தருவதாக இருக்க வேண்டும். சிறையில் நவீன மயமான பார்வையாளர்கள் அறை கட்டப்பட்டிருக்கிறது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

சிறைக் கைதிகள் குடும்ப உறுப்பினர்களோடு பேசுவதற்கு தொலைபேசி வசதி, நூலகம் ஆகிய வசதிகளை செய்திருக்கிறார்கள். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனை அமைக்க கோரியுள்ளனர். அது குறித்து, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கென்று தனி சிறைச்சாலை வளாகம் அமைத்திருப்பதற்கு நன்றி.

சிறைச்சாலை என்பது மனதிற்கு கனமான ஒன்று. அதையும் சுவையான அனுபவமாக மாற்றி, நீங்கள் விடுதலை அடைந்த பிறகு, நம் கையிலும் ஒரு தொழில் இருக்கிறது என்ற நம்பிக்கையை இந்த சிறைச்சாலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.’’இவ்வாறு துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசினார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், சிறைத்துறை அதிகாரி ரவிதீப் சிங் சாஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in