'மீண்டும் திருமங்கலம் பார்முலா'- மதுரை ஆட்சியர், எஸ்பியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தல்

'மீண்டும் திருமங்கலம் பார்முலா'- மதுரை ஆட்சியர், எஸ்பியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

திருமங்கலத்தில் உயர் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைப்படி ஜனநாயக ரீதியில் முறைகேடு இன்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆட்சியர், எஸ்பியிடம் மனு அளித்தனர்.

மதுரை மாவட்ட ஊராட்சி 16-வார்டு கவுன்சிலர் தேர்தல் நாளை (அக்.9) நடக்கிறது. ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் செய்துள்ளனர். இதற்கிடையில் தேர்தலை முறைகேடின்றி நடத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் ஆட்சியர் அனீஷ்சேகர், எஸ்.பி. பாஸ்கரனிடம் இன்று நேரில் மனுக்கள் அளித்தனர்.

ஆட்சியரிடம் அளித்த புகாரில், ''மதுரை மாவட்டம், 16 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி 97 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து 3 நாளுக்கு முன்பே புகார் மனு அளித்துள்ளோம். 97 வாக்குச்சாவடிகளிலும் உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களை அச்சுறுத்துகின்றனர்.

வாக்காளருக்கு சேலை கொடுக்கின்றனர். ஏற்கெனவே நடந்த திருமங்கலம் ஃபார்முலாவைப் பயன்படுத்தத் திட்டமிடுகின்றனர். அதிகாரிகளிடம் கூறினால் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். அதிமுகவின் வெற்றியைத் தடுக்க முயற்சிக்கின்றனர்.

ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தவேண்டும். முழுப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிகளின்படி நடக்க வேண்டும். குறிப்பாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும். தேர்தலை நேர்மையாக நடத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.யிடம் கொடுத்த புகாரில், ''மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றிக்கான அறிவிப்பை வெளியிட ஆளுங்கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஏற்கெனவே மாவட்டத்தில் அதிமுக சார்பில், 5 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளோம். திருமங்கலத்திலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளதால் மாவட்ட கவுன்சிலர் பதவியைக் கைப்பற்றத் திட்டமிடுகின்றனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த முறை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 8,500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இந்த இடைத்தேர்தலில் மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்கின்றனர். வெற்றி பெறப் பல்வேறு முறைகேடுகளை ஆளுங்கட்சியினர் செய்கின்றனர். ஏற்கெனவே இதுகுறித்துப் புகார் மனு அளித்துள்ளோம்.

ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனர். மீண்டும் திருமங்கலம் தேர்தல் ஃபார்முலா நடந்திடக்கூடாது. தேர்தலை நியாயமாக‌ நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையம், மதுரை ஆட்சியர், டிஜிபி, தென் மண்டல ஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.

இதில் எம்எல்ஏக்கள் விவி.ராஜன் செல்லப்பா, ஐயப்பன், பெரியபுள்ளான், முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழரசன், மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in