புதுச்சேரியில் கரோனாவால் உயிரிந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம்: முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரியில் கரோனாவால் உயிரிந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம்: முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
Updated on
1 min read

புதுச்சேரியில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வரின் கரோனா நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

கரோனா பெருந்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்க உச்சநீதிமன்றம் தேசிய மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதுதவிர, புதுச்சேரி அரசானது கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வரின் கரோனா நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்குகிறது.

இதற்கான நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று(அக். 8) நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி கரோனா தொற்றால் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் முதல்வரின் கரோனா நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கினார்.

இதன் மூலம் புதுச்சேரியில்- 1,445, காரைக்காலில்- 248, மாஹே - 45, ஏனாம் 107 என 1,845 குடும்பங்கள் பயனடைவார்கள். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:‘‘கரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.50 ஆயிரம் பேரிடர் மேலாண்மை முகமை மூலம் வழங்கப்படும்.

புதுச்சேரியில் மொத்தம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 893 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 402 பேர் குணமடைந்தவர்கள். 1.845 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

18 வயதுக்கு மேல் உள்ள 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். தற்போது 7 லட்சத்து 3 ஆயிரத்து 153 பேருக்கு முதல் டோசும், 3 லட்சத்து 37 ஆயிரத்து 708 பேருக்கு 2வது டோசும் போடப்பட்டுள்ளது. சுமார் 70 சதவீதம் பேருக்கும் முதல் டோசும், 33 சதவீதம் பேருக்கு 2வது டோசும் போட்டுள்ளனர்.

இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கரோனா பரவாமல் இருப்பதற்கும், பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கும் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம. இதை மனதில் வைத்து கொண்டு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தேவையான தடுப்பூசி சுகாதாரத்துறையிடம் உள்ளது" இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in