சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுக: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுக: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை திரும்ப பெறவும், இனியும் விலையேற்றப்படாமல் இருக்கவும், நிலைத்த தன்மைக்கும் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

நேற்று ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூபாய் 15 அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் குறிப்பாக சாதாரண மக்களைப் பெருமளவு பாதிக்கும்.

அதாவது 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையானது தற்போது உயர்த்தப்பட்டிருப்பதால், ரூபாய் 900.50 க்கு விற்கப்பட்ட சிலிண்டர் இனிமேல் ரூபாய் 915.50 ஆக விற்கப்படும்.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்த்தப்பட்டதும், செப்டம்பர் 1 ஆம் தேதி ரூபாய் 25 உயர்த்தப்பட்டதும் மக்களுக்கு பொருளாதாரத்தில் சுமையை கூட்டியது.

இதனைத் தொடர்ந்து இப்போதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி படிப்படியாக விலையேறினால் அது பொது மக்களைத் தான் வெகுவாகப் பாதிக்கும். கடந்த ஓராண்டு காலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 300 வரை உயர்ந்திருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பொதுவாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது உயர்வது பொது மக்களுக்கு ஏற்புடையதல்ல. காரணம் சாதாரண மக்கள் அன்றாட வீட்டு சமையல் பயன்பாட்டிற்கு சமையல் எரிவாயு சிலிண்டரை நம்பி பயன்படுத்தி வருகிறார்கள்.

தற்போதைய கரோனா காலத்தில் வருமானம் போதுமான அளவில் கிடைக்காத சூழலில் அன்றாட வாழ்க்கைக்கே பொருளாதாரம் தேவையான அளவிற்கு இல்லை. அப்படி இருக்கும் போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை சமாளிப்பது சற்று கடினம்.

இந்நிலையில் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தைக் காரணம் காட்டி, மாதம் மாதம் விலையேற்றினால் அது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக அமையும்.

மேலும் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து நாட்டு மக்களின் இயல்பு நிலை பாதிப்படையும் போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் நிலைத்த தன்மைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

எனவே மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை திரும்ப பெறவும், தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இருக்கும் நாட்டு மக்களின் நலன் கருதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றப்படாமல் இருக்கவும், நிலைத்த தன்மைக்கும் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in