

பாப்பான் சத்திரம் காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோயில் நில ஆக்கிரமிப்பு புகார்தொடர்பாக சரியான ஆதாரங்கள் அளித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உறுதியாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாப்பான் சத்திரத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் நிலத்தைதனியார் பொழுது போக்கு பூங்கா,தனியார் கல்வி நிறுவனம் உள்ளிட்டவை ஆக்கிரமித்துள்ளதாக பிரச்சினை எழுந்துள்ளது.
இந்த நில ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடர்ந்து பேசி வரும் ஆலய வழிபடுவோர் சங்கத்தின் துணைத் தலைவர் உமா ஆனந்தனிடம் இதுகுறித்து கேட்டபோது, “தனியார் பொழுது போக்கு பூங்கா, தனியார் கல்வி நிறுவனம் உள்ளிட்டவை ஆக்கிரமித்துள்ள 177 ஏக்கர் நிலம் காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமானது தான் என்பதை உறுதி செய்து பூந்தமல்லி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கடந்த 2008 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வந்த பிறகு, குறிப்பிட்ட நிலத்தை மீட்பதில் என்ன தடை உள்ளது. விதிப்படி கோயில் இடத்தை மாற்று மதத்தினருக்கு கொடுக்க முடியாது. எனவே, விசாரணை செய்ய வேண்டிய அவசியமில்லை.
இவை அனைத்தும் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய திமுக ஆட்சியில் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அமைச்சர் சேகர்பாபுவை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.
காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோயிலுக்கு முதன்முதலாக நிலத்தை தானமாக கொடுத்த ஆவணம் எங்களிடமும் உள்ளது. இவ்வாறு, 177 ஏக்கர் நிலமும் காசி விஸ்வநாதர் மற்றும்வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடமும் உள்ளன. அனைத்து ஆவணங்களையும் நேரம் ஒதுக்கி கொடுத்தால் அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து அளிக்க தயாராக உள்ளோம். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபால சுவாமி கோயில் நிலத்தைமீட்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களிடம் வாடகை பாக்கியை வசூல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபு உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றார்.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டபோது, “எங்களைப் பொறுத்தவரை கோயிலுக்கு சொந்தமான சிறிய இடத்தை கூட முறைகேடாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். கோயில் நிலம் தொடர்பான ஆவணங்களை அளிக்க விரும்புவோர் தாராளமாக நேரில் வந்து அளிக்கலாம். அந்த ஆவணங்கள் நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருந்தால் நிச்சயமாக பயன்படுத்துவோம்" என்றார்.
யார் இந்த உமா ஆனந்தன்?
ஆலய வழிபடுவோர் சங்கம் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உமா ஆனந்தன் இச்சங்கத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், பாஜகவின் மத்திய சென்னை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். ஆலய வழிபடுவோர் சங்கத்தின் மூலமாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களைப் பெற்று பிற சங்க நிர்வாகிகளுடன் இணைந்து கோயில்களில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டி சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார். இவர், கடந்த 13 ஆண்டுகளாக இப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.