

புதுச்சேரியில் வெகு விரைவில் 100 சதவீத தடுப்பூசியை அடைந்துவிடுவோம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தவும், 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்றவும் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி - குண்டுபாளையம் ஆருத்ரா நகர் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமினை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இன்று(செப்.30) நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்து மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது,‘‘புதுச்சேரியில் இதுவரை சுமார் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. தற்போது 10 லட்சம் தடுப்பூசியை தாண்டியுள்ளோம். இது ஆறுதலான விஷயம். அதற்காக சுகாதாரத் துறையைப் பாராட்டுகிறேன்.
புதுச்சேரியில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. தொடர்ந்து தடுப்பூசிகள் போட்டு வருகிறோம். மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். சிலர் முதல் தடுப்பூசியை இப்போது தான் போடுகின்றனர். அவர்கள் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால் இதனை முன்னரே போட்டுவிட்டு, தற்போது இரண்டாவது தடுப்பூசிக்கு அவர்கள் வந்திருக்க வேண்டும். கரோனா 3-வது அலை வரும் என்று சொல்கின்றனர். அதனை தடுப்பதற்கு தடுப்பூசி மட்டும் தான் ஒரே வழி. ஆகவே வெகு விரைவில் 100 சதவீதத்தை அடைந்துவிடுவோம்.’’என்றார். அப்போது உடனிருந்த முதல்வர் ரங்கசாமி கூறும்போது, ‘‘இன்னும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது.’’என்று தெரிவித்தார்.