

வீடு, பொது இடங்களில் பயன்படுத்த மாற்றுத் திறனாளிகளுக்காக நகரும் நவீன கழிப்பறையை மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் எம். அப்துல் ரசாக் கண்டுபிடித்துள்ளார்.
ரயில், பேருந்து, விமான நிலையங்கள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் போன்ற பொதுஇடங்களில் மக்கள் பயன்பாட்டுக்கென இந்திய வகைக் கழிப்பறைகளும், முதியோருக்கு மேற்கத்திய வகைக் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தக் கழிப்பறைகளை அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்துவதில் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதைத் தவிர்க்கும் விதமாக நவீன நகரும் கழிப்பறைக் கோப்பையை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளார் மதுரை பீபீ.குளம் பகுதி எலக்ட்ரீஷியன் எம். அப்துல் ரசாக்(50). ஏற்கெனவே தண்டவாள விரிசல் கண்டறிதல், ராணுவ வீரர்களுக்காகப் பனி தாங்கும் கோட், ரைஸ் குக்கர், கடல் நீரில் ஆயிலைப் பிரித்தெடுக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்தவர் அப்துல் ரசாக்.
மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை குறித்து மேலும் அவர் கூறியதாவது:
’’இரு கால், ஒரு கை, கால் இழப்பு, தவழும் தன்மை போன்ற பல்வேறு வகையில் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் பல நேரத்தில் வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பிட வசதியைப் பெறுவதில் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அதேபோல முதியவர்கள், நோயாளிகள், மூட்டுவலி இருப்போர், செயற்கைக் கால் பொருத்தியவர்கள் சாதாரணக் கழிப்பிடங்களைப் பயன்படுத்த முடியாத சூழலும் உள்ளது. இவர்களுக்காகவும் பிரத்யேகமாக நகர்த்தும் வகையிலான நவீன கழிப்பறைக் கோப்பையைக் கண்டுபிடித்துள்ளேன்.
மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை, குளியல் அறைக்குத் தனித்தனியே செல்ல வேண்டும். அதிலுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு இதை வடிவமைத்துள்ளேன். கழிப்பிடக் கோப்பையில் இருந்தபடி, கையால் தண்ணீரைத் திறந்து, ஷவர் மூலம் குளிக்கும் வசதியை அதே அறையில் ஏற்படுத்தி உள்ளேன். குளித்தபின், அங்கேயே ஆடை மாற்றிக் கொள்ளலாம்.
சுமார் 8 அடி உயர இரும்புக் கம்பியில் 2 அங்குல அளவில் கழிப்பிடக் கோப்பையைப் பொருத்தி தேவையான உயரத்திற்கு நகர்த்தலாம். கழிப்பிடக் கோப்பை பொருத்திய இரும்புக் கம்பியை சுவரில் இணைக்க வேண்டும். கோப்பைக்குள் இருந்து சிறு துவாரங்கள் மூலம் தண்ணீர் வெளியேறும். பஸ், ரயில், விமான நிலையம் போன்ற பொது இடங்களில் இது போன்ற நகரும் வசதியுள்ள கழிப்பறை இருந்தால் எல்லா மாற்றுத் திறனாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
இக்கழிப்பிட வசதியை ரூ.5 ஆயிரத்தில் ஏற்படுத்தித் தர முடியும். நன்கொடையாளர்கள் மூலம் வசதியற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வசதியை இலவசமாக உருவாக்கித் தர திட்டமிட்டுள்ளேன். ஏற்கெனவே நிறையக் கருவிகளைக் கண்டுபிடித்து, ரைஸ்குக்கர், தண்ணீர்த் தொட்டி சுத்தம் செய்தல் ஆகிய கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றுள்ளேன்.’’
இவ்வாறு அப்துல் ரசாக் தெரிவித்தார்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி பி.சண்முகவேல் கூறுகையில், ''2006-ல் பேருந்து விபத்தில் வலது காலை இழந்தேன். செயற்கைக் கால் பொருத்தி ஆட்டோ ஓட்டுகிறேன். இருப்பினும், சாதாரணக் கழிப்பறை செல்ல சிரமப்படுகிறேன். பொது இடங்களில் வெஸ்டர்ன் டாய்லெட் வசதி பெரும்பாலும் இருப்பதில்லை. ரசாக் கண்டுபிடித்த நகரும் டாய்லெட் உபகரணத்தை, பொது இடங்களிலும், மாற்றுத்திறனாளிகள், முதியோர் வசிக்கும் வீடுகளிலும் பொருத்தினால் பயனுள்ளதாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.