Published : 27 Sep 2021 05:26 PM
Last Updated : 27 Sep 2021 05:26 PM

மின் நுகர்வோருக்குச் சிறப்பான சேவை; 100 நாட்களில் சாதனை புரிந்த மின்சார வாரியம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி: கோப்புப்படம்

சென்னை

மின் நுகர்வோருக்குச் சிறப்பான சேவையை வழங்கி வருவதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்ட 'மின்னகம்' (மின் நுகர்வோர் சேவை மையம்) இன்றோடு (செப். 27) நூறு நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேரடியாக ஆய்வு செய்து மின்னகம் மேலும் சிறப்பாகச் செயல்படத் துறை சார்ந்த அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"முதல்வர் மு.க.ஸ்டாலினால் 20.06.2021 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத் தலைமை அலுவலகத்தில் தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் 24 மணி நேரமும் தங்களுடைய புகார்களைத் தெரிவிக்க மின்னகத்தை (94987 94987) தொடங்கி வைத்தார்.

அன்று முதல் நேற்று (செப். 26) வரை 3 லட்சத்து 53 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதில், 3 லட்சத்து 50 ஆயிரம் புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. அதாவது, 99 சதவீதம் புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. முதல்வர் தமிழகத்தில் இருக்கக்கூடிய 3.16 கோடி மின் நுகர்வோருக்குச் சிறப்பான சேவையை வழங்கிடும் சீரிய நோக்கத்தோடு மின்னகத்தைத் தொடங்கி வைத்தார்.

கடந்த காலங்களில் மின்நுகர்வோர்கள் மின்வாரியத்துக்கு புகார் தெரிவிக்க 106 சேவை எண்கள், 1912 உடன் சேர்த்து ஏறத்தாழ 107 சேவை எண்கள் செயல்பட்டன. இவை எல்லாவற்றையும் ஒருநிலைப்படுத்தி ஒருமுகப்படுத்தி ஒன்றுசேர்த்து ஒரே எண்ணில் புகார் தெரிவிக்க அதன் மூலம் தீர்வு காண வேண்டும் என்று மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையத்தை (94987 94987) முதல்வர் தொடங்கி வைத்தார்.

இன்று 100 நாட்களைக் கடந்து பொதுமக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. முதல்வரின் உத்தரவின்படி மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாகப் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு மாத காலத்தில் மின்சார வாரியத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் முதல்வரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் தொடர் நடவடிக்கையாக தமிழகத்தில் நம்முடைய மின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு மின் உற்பத்தியிலும், மின் நுகர்வோர்களுக்கு சேவை வழங்கும் வகையிலும் செயல்பாடுகள் அமையும்.

அதன் அடிப்படையில்தான் மின் உற்பத்திக்குத் தேவையான திட்டங்களை நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வர் உத்தரவிட்டுப் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மேலும், மின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத அளவாக ஒரே வருடத்தில் 1,00,000 விவசாயிகளுக்குப் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தினை மார்ச் மாதத்துக்குள் முதல்வரின் வழிகாட்டுதலின்படி செய்து முடிக்கப்படும்.

கடந்த 9 மாதங்களில் மின் பராமரிப்புப் பணிகள் எடுத்துக் கொள்ளப்படவில்லை, செய்யப்படவில்லை என்ற நிலையில், அவை எல்லாம் கணக்கெடுக்கப்பட்டு 10 நாட்களில் 2.30 லட்சம் பராமரிப்புப் பணிகள் கணக்கெடுக்கப்பட்டு 2.72 லட்சம் பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 42,000 பராமரிப்புப் பணிகள் கூடுதலாக எடுக்கப்பட்டு செய்து முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், எந்த இடத்தில் மின் அழுத்தம் அதிகம், குறைவு என்று கணக்கெடுக்கப்பட்டு 8,905 இடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. அந்த இடங்களில் உடனடியாகப் புதிய மின் மாற்றிகளை அமைக்க வேண்டும் என்று வாரியம் முடிவெடுத்து முதல்வரின் அனுமதி பெற்று, அதற்கேற்ற நிதி ஆதாரத்தை உருவாக்கி கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வரால் அந்தப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பருவமழையைப் பொறுத்தவரை முதல்வர் தலைமையில் அனைத்துத் துறைகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மின்சாரத் துறைக்குப் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

மின்சாரத் துறையைப் பொறுத்தவரை வரக்கூடிய பருவமழைக் காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் கையிருப்பில் உள்ளன. தேவையான உபகரணங்களும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.

எந்த இடங்களில் இடர்ப்பாடு வருகிறதோ அதை உடனடியாக நிவர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுடன் சேர்ந்து மின்வாரிய அதிகாரிகள் ஒன்றிணைந்து இடர்ப்பாடு பணிகளை நிவர்த்தி செய்ய மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது.

மின்னகத்துக்கு வரப்பெற்ற புகார்களில் ஏறத்தாழ 44,767 புகார்கள் மின் கட்டணம் சம்பந்தமானவை. அவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது இதுபோன்ற புகார்கள் வருவதில்லை. அதேபோல், பராமரிப்புப் பணிகள், புதிதாக மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெறுகின்றபோது மின்தடை சம்பந்தப்பட்ட புகார்களின் எண்ணிக்கையும் குறையும். படிப்படியாக இப்புகார்களைக் குறைப்பதற்கான முழு முயற்சிகளை எடுத்து இருக்கிறோம்.

தமிழகத்தில் 3,63,000 மின்மாற்றிகள் உள்ளன, அந்த மின்மாற்றிகள் பழுது ஏற்படும்போது மின்நுகர்வோர்கள் அல்லது பணியில் இருப்பவர் தகவல் தெரிவித்தால்தான் அது பழுது ஆகிவிட்டது என்பதை அறிய முடியும்.

எனவே, அந்த நிலையைப் போக்குவதற்கு 3,63,000 இடங்களிலும் DT மீட்டர் அமைப்பதற்குக் கடந்த சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ ரூ.1,270 கோடி மதிப்பீட்டில் அந்தப் பணிகள் நடைபெற இருக்கின்றன. அனைத்து மின் இணைப்புதாரர்களுக்கும் அவர்களே அவர்களுடைய மின்அளவீட்டைப் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய அறிவிப்பும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தினை மின்மிகை மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். கடந்தகால ஆட்சியில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களோ, புதிய திட்டங்களோ இல்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் 1,32,500 கோடி அளவுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், முதல் கட்டமாக திருவாரூரில் சூரிய மின்சக்தி பூங்கா அமைக்கும் அறிவிப்பையும் செய்துள்ளார்.

மின்னகத்தின் மூலம் பயன் அடைந்தவர்கள் சொல்லும் வார்த்தைகளை நாங்கள் கேட்கும்போது அது எங்களை இன்னும் வேகப்படுத்துகிறது. 100 நாட்களில் ஒரு சாதனையை மின்சார வாரியம் செய்திருக்கிறது. மின்சார வாரியம் சிறப்பாகச் செயல்படுகிறது.

அவசரம் மற்றும் அவசியத்தைக் கருத்தில் கொண்டும் நிதி நிலைமைக்கு ஏற்ப எந்த காலிப் பணியிடங்கள் அவசியம் என்று வாரியம் முடிவு செய்து முதல்வரின் அறிவுரையின்படி படிப்படியாக காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து மின்சார வாரியத்தின் செயல்பாடுகளை முதல்வர் கண்காணித்து, பல்வேறு ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் வழங்கி வருகிறார். முதல்வரின் வழிகாட்டுதலின்படி மின்சார வாரியத்தை மேம்படுத்தி, வடிவமைத்து மின் நுகர்வோர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்குவோம், வழங்கிக் கொண்டிருக்கிறோம்".

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x