

வேற்றுகிரகவாசிகளைப் போல மத்திய அரசு விவசாயிகளைப் பார்க்கும் போக்கை மாற்றிட 3 வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, முகத்தில் மண்ணைப் பூசி வாய்க்காலில் இறங்கி, விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேனாபதி கிராமத்தில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், வேற்றுகிரகவாசிகளைப் போல விவசாயிகளை நடத்துவதாக, மத்திய அரசைக் கண்டித்தும், முகத்தில் மண்ணைப் பூசி, புள்ளம்பாடி கிளை வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் இன்று (செப். 27) ஈடுபட்டனர்.
"போராட்டத்தின்போது வேற்றுகிரகவாசிகளைப் போல மத்திய அரசு இந்திய விவசாயிகளைத் தொடர்ந்து அவமதிக்கும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்திய விவசாயிகளை பாதிக்கவல்ல சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளைப் புறக்கணிக்க முயலும் வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி படுபாதாளத்தில் தள்ளவும், எதிர்கால விவசாயம் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தால் பெரும் சீரழிவையும் சந்திக்க உள்ளனர்.
எனவே, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்துக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம் தலைமை வகித்தார்.