உள்ளாட்சித் தேர்தல்: புதுச்சேரியில் போஸ்டர், பேனர்கள் அகற்றம்

உள்ளாட்சித் தேர்தல்: புதுச்சேரியில் போஸ்டர், பேனர்கள் அகற்றம்
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததையடுத்து புதுச்சேரி நகரப் பகுதியில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் போஸ்டர்கள், கட்-அவுட் பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 1,149 பதவிகளுக்கும் வருகின்ற அக். 21, 25, 28 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவித்தார். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அரசியல் கட்சியினர் வைத்துள்ள பேனர்கள், கொடிகளை அகற்றவும், சுவர் விளம்பரங்களை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் குழுவினர் இன்று (செப். 23) பேனர், கொடிகள், போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வாகனங்களுடன் சென்று அகற்றப்பட்ட பேனர்களை நகராட்சிக்குக் கொண்டுசென்றனர்.

புதுச்சேரி நகரப் பகுதி முழுவதும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை முதல் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பேனர், கொடிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அசம்பாவிதங்கள், பிரச்சினைகள் ஏதும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in