

புதுச்சேரியில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து 27-ம் தேதி நடைபெறும் பந்த் போராட்டத்தில் 12 இடங்களில் மறியலில் ஈடுபடுவது என அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்துப் புதுச்சேரி ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் சேதுசெல்வம் இன்று (செப். 21) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் 299 நாட்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய பாஜக அரசுடன் 12 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.
வரும் 27-ம் தேதி நாடு தழுவிய பந்த் போராட்டத்துக்கு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. அதனை ஏற்று புதுச்சேரியிலும் வருகிற 27-ம் தேதி பாரத் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காகப் பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகிறோம்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. வணிகர்கள், பேருந்து, ஆட்டோ, டெம்போ, திரையரங்கு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல்வேறு அமைப்பு மற்றும் கட்சிகளிடமும் ஆதரவைக் கோரி வருகிறோம்.
27-ம் தேதி பந்த் போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. பந்த் அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை 10 மணிக்கு 12 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக 23-ம் தேதி கிராமப்புறங்களிலும், 24 மற்றும் 25-ம் தேதி நகர்ப்பகுதிகளிலும் பந்த் போராட்ட விளக்க பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்தப்படும். இந்த பந்த் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவு தர கேட்டுக் கொள்கின்றோம்.’’
இவ்வாறு சேதுசெல்வம் தெரிவித்தார்.
பேட்டியின்போது சிஐடியு, ஐஎன்டியூசி, எல்எல்எப், எம்எல்எப், ஏஐயுடியுசி, என்டிஎல்எப் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.