

*
காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் வடக்கு சியாச்சின் சிகரத்தில் 19,600 அடி உயரத்தில் அமைந்துள்ள ராணுவ நிலை பனிச்சரிவில் சென்னை பட்டாலியனை சேர்ந்த 10 ராணுவ வீரர்கள் கடந்த 3ம் தேதி பனி சரிவில் உயிருடன் புதைந்தனர். இதில், 6 நாட்களுக்கு பிறகு, கர்நாடகவைச் சேர்ந்த ஹனுமந்தப்பா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். மற்ற 9 ராணுவ வீரர்களின் சடலங்கள், 9ம் தேதி மீட்கப்பட்டது.
ஜம்மூ காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக சடலங்கள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து வானிலை சீரானதை தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இருந்து ராணுவ வீரரின் உடல் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவர்களது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்களின் சடலங்கள், பெங்களூருக்கு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், பெங்களூருக்கு கொண்டு வரப்பட்ட, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராணுவ வீரர் ராமமூர்த்தியின் உடலுக்கு, ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், அங்கிருந்து ராணுவ வாகனத்தில், சொந்த ஊரான ஓசூர் அடுத்த குடிசாதனப்பள்ளிக்கு நேற்று இரவு 11.10 மணிக்கு கொண்டு வரப்பட்டது.
அவரது உடலை பார்த்து பெற்றோர் நஞ்சேகவுடு -பையம்மா, மற்றும் ராமமூர்த்தியின் மனைவி சுனிதா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பலியான ராணுவ வீரர் ராமமூர்த்தியின் உடலுக்கு தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை குடும்பத்தினரிடம், அமைச்சர்கள் வழங்கினர். பின்னர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் மற்றும் ஊர் பொதுமக்கள், அஞ்சலி செலுத்தினார்க.
ராணுவ வீரரின் உடலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்துகிறார்கள். அதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் அவரது வீட்டில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அவரது தோட்டத்தில் உடல், குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
குடும்பம்
சூளகிரி அடுத்த குடிசாதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நஞ்சேகவுடு - பையம்மா தம்பதியினரின் மகன் ராமமூர்த்தி(26). இவர், பேரிகை அருகே தெலுங்கு அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை பயின்ற ராமமூர்த்தி, கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். ஊட்டியில் பயிற்சி பெற்றபின், தொடர்ந்து பஞ்சாப், அசாம், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்தார். விவசாயத்தை மட்டும் நம்பி உள்ள இக்குடும்பத்தினர், ராமமூர்த்தியின் வருமானம் மூலம் குடும்பம் நடத்தி வந்தனர்.