

ஜூலை 3-ல் நடைபெறவுள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிவிப்பை, அதிமுக பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார்.
திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த டி.எம்.செல்வகணபதிக்கு சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால். அவரது பதவி பறிக்கப்பட்டது.
அந்த இடத்துக்கும் ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸைச் சேர்ந்த ஜனார் தன் ரெட்டி காலமானதால் ஏற்பட்ட காலியிடத்திற்கும், ஒடிஷாவில் சசி பூஷண் பெஹரா, ரவிநாராயண் மொஹபத்ரா ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதால் ஏற்பட்ட காலியிடங்களிலும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை ஜூன் 16-ல் வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 23. மனுக்கள் ஜூன் 24-ல் பரி சீலனை செய்யப்படும். வாபஸ் வாங்க கடைசி நாள் ஜூன் 26. வாக்குப்பதிவு ஜூலை 3-ம் தேதி நடைபெறும்.