

நாம் வசிக்கின்ற பகுதியில் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமென்றால் அதிகப்படியான மரக்கன்றுகளை நட வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தினார்.
புதுச்சேரி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டின் 75-வது ஆண்டின் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக, ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ், புத்தர் தோட்டம் திறப்பு விழா மற்றும் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று (செப்.17) நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் தோட்டம் மற்றும் அங்கு நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, மரக்கன்றுகளை நட்டார். பின்னர், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
இவ்விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:
‘‘நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாகத் தடுப்பூசியை அறிவித்து, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கரோனா தொற்றிலிருந்து நாம் விடுபட முடியும் என்று பிரதமர் கூறிக் கொண்டிருக்கிறார். எனவே, மாணவர்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை, அச்சப்படவும் தேவையில்லை. கரோனா தடுப்பூசி மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. வரும் முன் காப்போம் என்பதற்கான ஒரு நிகழ்வாக பிரதமர் இதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் அமல்படுத்த வலியுறுத்தி வருகிறார்.
மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் பெற்றோர், உறவினர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் துணைபுரிய வேண்டும். வெளிநாட்டில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்த வரலாறு மாறி, இன்று இந்தியாவில் இருந்து தடுப்பூசியை உற்பத்தி செய்து மற்ற நாடுகளுக்குத் தரும் வகையில் நாம் தலைநிமிர்ந்து நிற்கிறோம். இதற்கு முக்கியக் காரணம் பிரதமர்தான்.
மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் மிகவும் முக்கியம். நாம் மரம் நடுவதை சாதாரண ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்கிறோம். மரம் நடுவது என்பது பல தலைமுறைகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்து. நாம் நிறைய மரம் நடுவதன் மூலம் நமக்கு சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும்.
ஒரு காலகட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்பது உங்களுக்குத் தெரியும். பிறகு பிரதமர் தலையிட்டுப் பெரிய முடிவுகள் எடுத்த பிறகுதான் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினை தீர்ந்தது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் எல்லாருக்கும் பலன் தரக்கூடிய வகையில் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் சுத்தமான காற்றை நாம் சுவாசிக்க முடியும்.
இன்று காற்றில் எந்த அளவுக்கு மாசு உள்ளது என்பதைப் பல புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, நாம் வசிக்கின்ற பகுதியில் சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமென்றால் அதிகப்படியான மரக்கன்றுகளை நட வேண்டும். அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் ஒரு மாதத்தில் நிறைய மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கல்வித்துறை இயக்குநரிடமும் கூறியுள்ளேன்.’’
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.