

எக்காரணத்தைக் கொண்டும் சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்பக் கூடாது என, கோவை அரசு கால்நடை உதவி மருத்துவர்களுக்கு மண்டல கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, கோவை மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த பி.சுஜாதா என்பவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், "அரசு கால்நடை மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் எப்போது வருகிறார்கள் என்ற விவரம் பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. மருத்துவர்களுக்கு பதில், மருத்துவ உதவியாளர்கள் அங்கு சிகிச்சை அளிக்கின்றனர். எனவே, அங்கு பணியாற்றும் மருத்துவர்களின் பெயர், பணி நேரம் ஆகியவற்றை மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்குத் தெரியும்படி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
மேலும், கால்நடை மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை அளிக்கும் வசதிகள் இல்லை. தெருநாய்களுக்குக் கருத்தடை செய்யும் வசதியும் இல்லை. எனவே, இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு முதல்வரின் தனிப்பிரிவு வாயிலாக, கோவை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அளித்துள்ள பதிலில், "கோவை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் பணியாற்றும் அனைத்து சார்நிலை அலுவலர்கள் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் அனைவரும் தலைமையிடத்தில் தங்கி, வார நாட்களில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் பணியாற்ற வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் சிகிச்சைக்கு வரும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்பக் கூடாது. பொதுமக்கள் புகார் அளிக்காத வகையில் கிசிச்சை அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.