தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டாத ஜெயலலிதா: விஜயகாந்த் காட்டம்

தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டாத ஜெயலலிதா: விஜயகாந்த் காட்டம்
Updated on
2 min read

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அதிமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. அதே பாணியில் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றி வருகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்படுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டுமென பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும், செவி சாய்க்காத அதிமுக அரசு தற்போது திடீரென விவசாயிகள் நீண்ட தூரம் பயணம் செய்யாமல், உற்பத்தி செய்த நெல்லை விற்பனை செய்யமுடியுமென வியாக்கியானம் கூறி, தமிழக சட்டமன்ற தேர்தலை மனதில்கொண்டு, விவசாயிகளை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெறவேண்டும் என்கின்ற நோக்கத்தில் மட்டுமே, கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நெல் கொள்முதலுக்கு வழங்கக்கூடிய தொகையான ரூபாய் 1,460 மற்றும் 1,520 என்பது கட்டுபடியாகவில்லை என்றும், அதனால் அதனை உயர்த்தி வழங்கவேண்டும் என்றும் விவசாயிகள் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இந்த அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. நெல் கொள்முதலுக்கு விலையை உயர்த்தி வழங்க மனமில்லாத அதிமுக அரசு விவசாயிகளை ஏமாற்றவே கூடுதல் நெல்கொள்முதல் நிலையம் என அறிவித்துள்ளது.

மேலும், கடந்த 24.01.2016 அன்று “டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவேண்டும்” என்பது குறித்தும், நெல் கொள்முதலில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்தும் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

ஆனால், இதுவரையிலும் அதற்குரிய தீர்வு காணப்படவில்லை. ஆனால் அதற்கு மாறாக தற்போது கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு, குவிண்டாலுக்கு ஐம்பது முதல் நூறு ரூபாய் வரை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தாத அதிமுக அரசு, டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளின் நலனிலா அக்கறை செலுத்தப்போகிறது.

விவசாய நிலங்களில் கெயில் நிறுவனத்தால் எரிவாயு குழாய் பாதிக்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுக்கு ஒன்றுக்கு இருமுறை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கால அவகாசம் அளித்தும், விவசாயிகளின் மீது துளியும் அக்கறை இல்லாமல், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜர் ஆகாமல் இருந்ததன் விளைவே ஏழு மாவட்டத்திலுள்ள 134 கிராமங்களை சார்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவிற்காக ஐந்து மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற விசாரணையின்போது ஆஜரானதாகவும், ஆனால் கெயில் நிறுவன வழக்கிலும், ஜல்லிக்கட்டு வழக்கிலும் உரிய அக்கறை செலுத்தாமல் அதிமுக அரசு இருந்ததாக சட்டவல்லுனர்கள் பலரும் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த அக்கறையை கெயில் மற்றும் ஜல்லிக்கட்டு வழக்குகளில் காட்டியிருந்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் போக்கே மாறியிருக்கும்.

பொதுநலனை பேணவேண்டிய பதவியில் இருந்துகொண்டு, அதில் அக்கறை செலுத்தாமல் ஆட்சி நடத்தும் ஜெயலலிதாவிற்கு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அதிமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. அதே பாணியில் உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏமாற்றி வருகிறார்.

எல்லோரையும் எல்லா நாளும் எப்போதும் ஏமாற்ற முடியுமெனக் கருதும் அவருக்கு தமிழக விவசாயிகள் தக்க சமயத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in