

மூத்த அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமானவர் ஆர்.எம்.வீரப்பன். இவர், எம்.ஜி.ஆர். கழகத் தலைவருமாவார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் பதவி வகித்தவர். அதிமுக தலைவராக இருந்தபோதிலும், திமுக தலைவர்களுடனும் நட்பு பாராட்டி வருகிறார்.
இன்று (செப். 09) ஆர்.எம்.வீரப்பன் தனது 95-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, சென்னை, தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்துக்கே சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். ஆர்.எம்.வீரப்பனுக்கும் அவருடைய மனைவிக்கும் பொன்னாடை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அப்போது, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆர்.எம்.வீரப்பன் குடும்பத்தினர் உடனிருந்தனர்.