குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னையில் வார்டு வாரியாக பாதுகாப்பு குழுக்கள் அமைக்க முடிவு

குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னையில் வார்டு வாரியாக பாதுகாப்பு குழுக்கள் அமைக்க முடிவு
Updated on
1 min read

குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய, தன்னார்வலர்களை இணைத்து வார்டு வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்த மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் சிறுவயதில் திருமணம், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றுவது உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு தேவையான சட்ட, மருத்துவ உதவிகளை வழங்கும் பணிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், பாதிக்கப்படும் குழந்தைகளின் விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்க முன்வராத காரணத்தால் பிரச்சினைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இவற்றுக்கு தீர்வுகாண, தன்னார்வலர்களை இணைத்து சென்னையில் வார்டு வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியில் சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அ.தீ.ரமேஷ் கார்த்திக் கூறியதாவது:

சென்னையில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தகவல்கள் உடனடியாக கிடைத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மீட்கலாம். ஆனால், தற்போது குழந்தைகள் சந்திக்கக்கூடிய பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை யாரிடம் அணுகி கூறுவது என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை. இதனால், குழந்தைகளின் பாதிப்புகள் குறித்த தகவல்கள் முறையாக கிடைக்காத சூழல் இருந்து வருகிறது.

இவற்றுக்கு தீர்வு காண வார்டு வாரியாக மகளிர் சுய உதவி குழுவினர், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், மாணவர்கள் உட்பட குறைந்தது 15 தன்னார்வலர்களை இணைத்து குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு ஏற்படுத்தும் குழுக்களுக்கு போக்சோ சட்டம், காவலன் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.

மேலும், தங்களது பகுதியில் அருகாமையில் உள்ள காவல் நிலையம், மருத்துவமனை மற்றும் காவல் ஆய்வாளர்கள் எண் உட்பட எந்தெந்த பிரச்சினைகளுக்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்ற கையேட்டை அச்சடித்து வழங்க உள்ளோம்.

தங்களது வார்டுக்குள் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபடுவர். இதன் மூலம், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

மேலும், இக்குழுவினர் மூலம் கல்வி உதவி தேவைப்படுகிறதா, பெண் குழந்தைகள் பள்ளி செல்வது தடைப்பட்டுள்ளதா, குழந்தைகளுக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதா என்பன உள்ளிட்டவற்றையும் கண்டறிந்து தீர்வு காணவும் முடிவு செய்துள்ளோம்.

குழுக்களில் தன்னார்வலர்களாக இணைய விரும்புபவர்கள் 9940631098, 044-25952450, 9944290306 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இக்குழுவில் இணைய கல்வி தகுதி தேவை இல்லை. விருப்பமுள்ள அனைவரும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in