

புதுச்சேரியில் சுருக்குமடி வலை தொடர்பாக 3 மீனவ கிராமங்களிடையே எழுந்த மோதல் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதால், 144 தடை உத்தரவு இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளது.
புதுச்சேரி அடுத்துள்ள வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பாகீரப்பாளையம் ஆகிய மீனவ கிராமத்தினரிடையே தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி மோதலை தடுத்தனர்.
மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அந்த 3 கிராமங்களிலும் 144 தடை உத்தரவும் போடப்பட்டது. இதனிடையே மீனவர்களின் மோதலுக்கு சுமுக தீர்வு காணும் வகையில் 3 மீனவ கிராமப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று(செப். 4) மாலை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் தட்சிணாமூர்த்தி, அனிபால் கென்னடி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பேச்சு வார்த்தையில் வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பாகீரப்பாளையம் ஆகிய 3 மீனவ கிராம பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் லட்சுமிநாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:‘‘மோதல் நடைபெற்ற மறுநாள் முதல்வர், 3 கிராம மீனவ பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு காணும்படி உத்தரவிட்டார்.
இந்தப் பேச்சு வார்த்தையில் மோதல் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. அதன்படி, இந்த மோதலுக்கு முன்பு இருந்த நிலைப்படி மீன்பிடி தொழிலை மேற்கொள்வதென்றும், எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் எழாது என்றும், மீனவர்கள் தரப்பில் உறுதியளித்தனர்.
இதனையடுத்து, அந்த 3 கிராமங்களில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு உடனே விலக்கப்படுகிறது. நாளை முதல் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்கச் செல்வார்கள். இனி எப்போதும் எந்தப் பிரச்சினையும் வராத வகையில் சட்டப்படியான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.’’எனத் தெரிவித்தார்.