

பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற இந்திய வீரர் பிரவீன் குமாருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5-ம் தேதிவரை போட்டிகள் நடைபெற உள்ளன. ஆடவர் உயரம் தாண்டுதல் (டி64) பிரிவுக்கான போட்டிகள் இன்று (செப். 03) நடந்தன. இந்தியா சார்பில் 18 வயதான பிரவீன் குமார் பங்கேற்றார்.
பாராலிம்பிக்ஸ் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்ற பிரவீன் குமார், 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். பிரிட்டனைச் சேர்ந்த ஜோனத்தன் ப்ரூம் எட்வர்ட்ஸ் 2.10 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தையும், போலந்து வீரர் மேக்ஜே லெபியாட்டோ 2.04 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதுவரை பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என, மொத்தம் 11 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்குப் பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்தவகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "சாதனைகளைப் படைப்பதும், முறியடிப்பதுமாக டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது.
புதிய ஆசிய சாதனையுடன் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள பிரவீன் குமாருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகளிலும் வெற்றி கைகூட வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.