

விஜயகாந்த் ‘கிங்’ ஆவதைவிட ஜெயலலிதா ‘குயின்’ ஆக தொடர்வதே நல்லது என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:
காந்திய மக்கள் இயக்கம் 25 தொகுதிகளில் போட்டியிடும் என்று 8 மாதம் முன்பே அறிவித்தீர்கள், மக்கள் ஆதரவு எப்படி உள்ளது?
மக்கள் நலக் கூட்டியக்கத்தை தேர்தல் கூட்டணியாக அறிவியுங்கள் என்று கடந்த ஆண்டு ஜுலையில் கூறினேன். அப்போது அதை அவர்கள் ஏற்கவில்லை. அதனால், எங்கள் இயக்கத்தின் சார்பில் 25 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தோம். அவர்கள் நல்ல அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
எந்தக் கட்சியும் காந்திய மக்கள் இயக்கம் ஆதரிக்காது என்று சொல்லிவிட்டு, இப்போது மீண்டும் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்பதாக சொல்கிறீர்கள். இப்படி மாற்றி மாற்றி பேசுவதால் உங்கள் மீதான நம்பிக்கை சீர்குலையாதா?
அதுபற்றி எனக்கு கவலையில்லை. திருமாவளவன்கூட என்னை தரகர் என்றார். மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கடந்த மக்களவைத் தேர்தலில் செயல்பட்டேனே தவிர, யாரிடமும் ஒரு செப்புக்காசைக்கூட பெறவில்லை. நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வழிகாட்டவே, திமுக, அதிமுகவை எதிர்க்கும் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கிறேன்.
பிறகு ஏன் அதிமுகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என சொல்லி வந்தீர்கள்?
இப்போதும் அதைத்தான் சொல்கிறேன். அதிமுகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும். இன்றைக்கு திமுகவுக்கு வலுவான கூட்டணி இல்லை. எல்லா கட்சியிலும் ஆளாளுக்கு முதல்வர் கனவில் உள்ளதுதான் இதற்கு காரணம். மக்கள் நலக் கூட்டணிக்கு 10 சதவீத வாக்கு வங்கிகூட இல்லை. எனவே, சூழல் அதிமுகவுக்குதான் சாதகமாக உள்ளது.
விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தால் மக்கள் நலக் கூட்டணியை புறக் கணிப்பேன் என்றீர்கள். ஆனால் திருமாவளவன், வைகோ போன்றவர்கள் விஜயகாந்தை முதல்வராக்குவது பற்றி பரிசீலிப்போம் என்று கூறியுள்ளார்களே?
விஜயகாந்தை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அவரை முதல்வர் ஆக்குவேன் என்பது ஏற்புடையதல்ல. குடும்ப அரசியல், கட் அவுட் கலாச்சாரம், தனி மனித துதி என்று திமுக, அதிமுகவுக்கு கொஞ்சமும் வித்தியாசம் இல்லாததுதான் தேமுதிக. விஜயகாந்த் ‘கிங்’ ஆவதைவிட, ஜெயலலிதா ‘குயின்’ ஆக தொடர்வதே நல்லது.
திமுக - காங்கிரஸ் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பேசலாம். அதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கருணாநிதி நினைக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் பொய் சொல்லிவிட்டனர் என்றார் கருணாநிதி. இப்போது அவர்கள் உண்மையைச் சொல்லிவிட்டார்களா? திமுக - காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறாது. திமுகவினரின் விளம்பரங்கள் மக்களிடம் வெறுப்பைத்தான் உருவாக்கும்.
ஊழலற்ற நிர்வாகம், மதுவிலக்கு என்று பாமகவும் தனியாக இயங்கி வருகிறதே?
அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்களுடனே கூட்டணி என்று பாமக அறிவித்ததன் மூலம், அவர்களுக்கு அவர்களே ஒரு தடுப்புச் சுவற்றை கட்டிக் கொண்டுள்ளனர். இதை ராமதாஸிடமே கூறியுள்ளேன். தமிழகத்தில், ஒரு கோடி தலித்துகள் உள்ளனர். பாமக எவ்வளவு மறுத்தாலும், தலித் விரோத கட்சி என்னும் முத்திரை அதன் மீது ஆழமாக குத்தப்பட்டுள்ளது. எனவே, பாமக வெற்றி சாத்தியமில்லாதது.
தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு உங்கள் இயக்கம் வலிமையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
எனது இயக்கம் வெற்றி பெறுமா என்பது பற்றியெல்லாம் கவலை இல்லை. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மற்றும் மாணவர் அமைப்பினரும் எங்களுடன் இணையவுள்ளனர். தொகுதிக்கு 2 ஆயிரம் வாக்குகள்கூட பெறமுடியவில்லை என்றால் அரசியலில் இருந்து விலகிவிடுவது என்று முடிவெடுத்துள்ளேன்.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.