புதுச்சேரியில் கால்நடைகளுக்கான மருந்து, தரமான சினை ஊசிகள் இல்லை: எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு

புதுச்சேரியில் கால்நடைகளுக்கான மருந்து, தரமான சினை ஊசிகள் இல்லை: எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு
Updated on
2 min read

புதுச்சேரியில் கால்நடைகளுக்கான மருந்து, தரமான சினை ஊசிகள் இல்லை எனப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி சட்டசபையில் இன்று (செப். 1) பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:

‘‘புதுச்சேரியில் கடன் தள்ளுபடி செய்ய முடியாது. ஆனால், வட்டி அதிகமின்றியும், கடனை நீண்ட காலம் செலுத்தும் வகையிலும் கேட்டுப் பெறலாம்.

மத்திய அரசு நாடு முழுக்க உள்ள டெக்ஸ்டைல் நிறுவனங்களை மேம்படுத்த நிதியுதவி வழங்கி வருகிறது. எனவே பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்களைப் பயன்படுத்தி நிதியுதவி பெற்று வர வேண்டும். புதுச்சேரியில் 22 கார்ப்பரேஷன்கள் மூடுவிழாவை நோக்கிச் செல்கின்றன. 10 மூடப்பட்டுவிட்டன. அதில் பணிபுரிந்த 10 ஆயிரம் பேர் 8 மாதம் முதல் 5 ஆண்டுவரை ஊதியமின்றியும், வேலையின்றியும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளால் தொடங்கப்பட்டது. தற்போது அதுபோன்ற ஆலையை ஆரம்பிக்க ரூ.500 முதலீடு செய்தால் கூட முடியாது. மூடப்பட்டிருக்கும் அந்த மில்லுக்கு ரூ.40 கோடி மட்டுமே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மில்லை மீண்டும் திறந்து இயக்குவது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. அந்த சர்க்கரை ஆலையில் எரிசாராயம், மின்சாரம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை கூடுதலாக உற்பத்தி செய்து இயக்கலாம்.

புதுச்சேரிக்கு நிலத்தடி நீர் எடுக்காத, மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளைக் கொண்டுவர வேண்டும். முந்தைய அரசு செய்த குப்பை வரி விதிப்பு, பாதாள சாக்கடை வரி விதிப்பு, குடிநீர், மின் கட்டணம் உயர்வு ஆகியவையும்தான் நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு காரணம். எனவே அவற்றை நீக்குங்கள்.

வீடற்ற ஏழைகளுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். நீங்கள் வந்தால்தான் (ரங்கசாமி) தரமான வெள்ளை அரிசி தரப்படும் என்று மக்கள் நினைத்தனர். ஆனால், தற்போதும் தரமற்ற அரிசியே வழங்கப்படுகிறது. எனவே நல்ல தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுங்கள்.

மின்துறையைத் தனியார் மயமாக்கமாட்டோம் என்று அறிவியுங்கள். மின்துறையில் ரூ.1855 மதிப்புள்ள ஸ்மார்ட் மீட்டரை ரூ.14 ஆயிரத்துக்கு மத்திய அரசின் அனுமதியே இல்லாமல் சீனாவிடம் இருந்து வாங்கியுள்ளனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆஷா பணியாளர்கள் ரூ.3 ஆயிரத்திற்குப் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கால்நடைகளுக்கான மருந்தோ, தரமான சினை ஊசியோ கிடையாது. நோய் ஏற்பட்டால் வெளியில் மருந்து வாங்கி வரக் கூறுகின்றனர். வாங்கித் தராவிட்டால் அந்தக் கால்நடை இறந்து போய்விடுகிறது.

பிற மாநிலங்களில் கால்நடைத் துறையில் கார்ப்பரேஷன் ஆரம்பித்து மத்திய அரசிடமிருந்து நிதி பெறுகின்றனர். அதுபோல் புதுச்சேரியிலும் மத்திய அரசின் நிதியைப் பெற கால்நடைத்துறையில் கார்ப்பரேஷன் ஆரம்பிக்க வேண்டும். கால்நடைத் துறையில் கம்பவுண்டர்களே மருத்துவர்களாக செயல்படும் நிலை உள்ளது.

மருத்துவர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். முன்பு கால்நடை மருத்துவத்திற்குத் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்து சென்றார்கள். ஆனால் தற்போது புதுச்சேரி கால்நடை வளர்ப்போர் சிறந்த சிகிச்சைக்காகத் தமிழகத்திற்குச் செல்கின்றனர்’’.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in