

சென்டாக் மூலம் சேர்க்கை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும். அனைத்து அரசுத் துறை தினக்கூலி ஊழியர்களுக்கும் ரூ.10 ஆயிரத்துக்கும் குறையாமல் ஊதியம் வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப் பேரவையில் இன்று (செப். 1) பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியில் முதல்வர் ரங்கசாமி பதிலளித்துப் பேசியதாவது:
‘‘அரசுத் துறையின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இந்த ஆண்டு முதல் கட்டமாக ரூ.1 கோடி வழங்கப்படும். இதன்பிறகு ரூ.1 கோடி நிதி வழங்கப்படும். ஆதிதிராவிடர் வீடு கட்டும் நிதி தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.5.50 லட்சமாக உயர்த்தப்படும்.
ஆதிதிராவிடர் முதியோர் பெறும் ஓய்வூதியத் தொகை மேலும் ரூ.500 உயர்த்தப்படும். அவர்களுக்கான இறுதிச் சடங்கு நிதி ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அம்பேத்கர் மணிமண்டபம் பின்புறம் உள்ள இடத்தில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
சென்டாக் மூலம் சேர்க்கை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும். உயர்கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். ஆதிதிராவிடர் கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகை ரூ.18,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும். பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்கள் ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். பிற துறையின் தினக்கூலி ஊழியர்களுக்கும் ரூ.10 ஆயிரத்துக்கும் குறையாமல் வழங்கப்படும்.
அங்கன்வாடி பணியாளர்கள் 50 சதவீதம் பேர் நிரந்தரம் செய்யப்படுவர். சுகாதாரத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் என்.ஆர்.எச்.எம் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். சுகாதாரத்துறையில் 10 ஆண்டுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் மருத்துவர் உள்ளிட்ட ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவர். பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கான நிதி வழங்கப்படும். கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வடி சாராய ஆலை ஊழியர்கள் தினக்கூலி ரூ.450 ஆக உயர்த்தப்படும். புதுச்சேரி மாநில வருவாயை ஈட்டுவது, பொருளாதாரத்தை உயர்த்துவது என்ன என்பது குறித்தும் அரசு நிச்சயமாகச் சிந்திக்கும்.
அதற்குத் தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும். புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அனைத்துத் தரப்பினரும் பயன்படும் வகையில் இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளோம். இதனை அனைவரும் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்.’’
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.